ஏற்றம் கொடுக்கும் எள் சாகுபடி!

வயதானாலும் உழைப்பை, விவசாயத்தை விட்டு விடாமல் சொந்தக் காலில் நிற்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா வீரணம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி அம்மாள். இவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார். தற்போது மானாவாரிப் பயிரான எள்ளைப் பயிரிட்டு இருக்கிறார். ஒரு மாலைப்பொழுதில் சிவகாமி அம்மாளைச் சந்தித்தோம்.
“ நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த தண்டராம்பட்டுதான். இங்குதான் எனது நிலமும் இருக்கிறது. எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலே விவசாயம் செய்து வருகிறேன். எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் எள் சாகுபடி செய்திருக்கிறேன். நான் ஏற்கனவே இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தேன். எள் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக இருமுறை டிராக்டர் கொண்டு உழவு ஓட்டினேன். சிலநேரங்களில் டிராக்டர் இல்லாத பட்சத்தில் 3 முறை ஏர் பூட்டிய கலப்பையால் உழுவேன்.

5 முறை கூட உழவு செய்வேன். இதுபோல் உழவு செய்தால்தான் மண் கட்டியில்லாமல் பொலபொலப்புத் தன்மை உடையதாக மாறும். எள் மட்டும் கிடையாது. மற்ற பயிர்கள் சாகுபடி செய்வதற்கும் மண் கடினமாக அல்லது கட்டிகளாக இருக்கக் கூடாது. நிலத்தில் அடியுரமாக தொழுவுரம், மக்கிய இலைச்சருகுகளைப் போட்டு ஒருமுறை உழவு ஓட்டினேன்.நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் இருக்க வேண்டும். அப்படி நிலத்தில் ஈரப்பதம் இல்லையென்றால் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவேன். எனக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு 2 கிலோ விதை எள் தேவைப்பட்டது. ஒரு கிலோ விதை எள்ளை அருகில் இருக்கும் எள் விவசாயிடம் இருந்து ரூ.150க்கு வாங்கி வந்தேன். எள்ளைப் பொருத்தவரை விதைகளை வரிசையாக விதைக்க வேண்டும். அதாவது விதையின் அளவில் 4 மடங்கு மணலுடன் சேர்த்து நிலத்தின் மேற்பரப்பில் வரிசையாக தூவுவேன். இப்படி எள் விதையைத் தூவும்போது அரை அடிக்கு ஒரு செடி என்ற கணக்கில் செடி இருக்கும்.

விதையைத் தூவிய 4 லிருந்து 5வது நாளில் விதையில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிவிடும். செடி நன்கு பச்சையாக வந்தால் அதற்கு ஏற்றவாறு உரங்கள் போடுவேன். மஞ்சளாக வந்தால் அருகில் உள்ள வேளாண்மை அலுவலர்களை சந்தித்து அவர்கள் கூறும் உரங்களை வாங்கி பயன்படுத்துவேன். முளைப்பு வந்த 20வது நாளில் பயிர்களுக்கு இடையில் இருக்கும் களைகளை வெட்டி எடுப்பேன். இதிலிருந்து 35 நாட்கள் கழித்து இரண்டாவது களை வெட்ட வேண்டும். எள்ளுக்கு மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து, சுமார் 5 அல்லது 6 முறை நீர் பாய்ச்சுவோம். அதாவது 25வது நாள் பூக்கும் தருவாயிலும், காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சி அடையும்போதும் முறையே 2 முறை நீர்ப் பாய்ச்சுவோம். பூ பூக்கும் பருவத்திலும், காய் பிடித்து முற்றும் பருவத்திலும் நீர் பாய்ச்சுவதை கவனமாக கடைபிடிப்போம். பயிர் செய்து 70 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள்ளாக அறுவடை செய்யலாம். அறுவடை செய்த எள் செடிகளை களத்துமேட்டில் அடுக்கி வைப்போம். 5 நாட்கள் கழித்து எள்ளுக் கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து வெயிலில் காய வைப்போம். பின்னர் ஒரு குச்சி எடுத்து மெதுவாக செடிகள் மீது தட்டினால் போதும் எள் கீழே உதிர்ந்து விடும். பின்பு முழுவதுமாக கூட்டி தூற்றுவோம். தூற்றிய பின்னர் சாக்குப் பையில் மூட்டையாக கட்டுவோம். எங்களுக்கு எப்படியும் 300 கிலோ முதல் 400 கிலோ வரை எள் கிடைக்கும். இதை விற்பனை செய்வதன் மூலம் 40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். செலவு போக 35 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இந்தக் குறுகிய காலத்தில் அதிக பராமரிப்பு வேலை இல்லாமல் இந்த லாபம் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு
சிவகாமி அம்மாள் – 97874 70755

ஒரு ஏக்கரில் 300 கிலோ முதல் 400 கிலோ வரை எள் மகசூலாக கிடைக்கிறது. இதை 80 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி வைக்கிறார்கள். ஒரு ஏக்கரில் குறைந்தது 4 மூட்டை மகசூல் கிடைக்கும். கடந்தாண்டில் இந்தப் பகுதியில் ஒரு மூட்டை எள் ரூ.8 ஆயிரம் என விற்பனை ஆகியிருக்கிறது. இந்த ஆண்டு ஒரு மூட்டை ரூ.11 ஆயிரம் வரை விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்தால் ரூ.44 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதில் செலவு குறைவுதான். செலவு ரூ.9 ஆயிரம் ஆனாலும் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்கிறார் சிவகாமி அம்மாள்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு