எழும்பூர் ரயில் நிலையம் ரூ.734.91 கோடியில் புதுப்பிக்கும் பணி தீவிரம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி ரூ.734.91 கோடியில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: உலகத்தரத்திலான சூழல், எதிர்கால வசதிகள் மற்றும் விமான நிலையம் போன்ற சேவைகளை பயணிகளுக்கு வழங்கும் வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலைய பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. மறுசீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் அக்டோபர் 2022ல் வழங்கப்பட்டது, பணிகள் சீரான வேகத்தில் முன்னேறி வருகின்றன.

காந்தி இர்வின் சாலை பக்கம் பல நிலை வாகன நிறுத்துமிடம் 100 சதவீதம் தூண் அடித்தள பணிகள் நிறைவு, அதே போல 80சதவீதம் தூண் தலை பணிகள் நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கம் பல நிலை வாகன நிறுத்துமிடம் 85 சதவீதம் தூண் அடித்தளபணிகள் நிறைவு. அதே போல 33சதவீதம் தூண் தலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காந்தி இர்வின் சாலை பக்கம் பல நிலை வாகன நிறுத்துமிடங்களுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைப்பு, அஞ்சல் அலுவலகம் மற்றும் சரக்கு அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்றுதல், வரவேற்பு முனையம் மற்றும் சரக்கு எப் ஒ பி வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காந்தி இர்வின் சாலை முனைய கட்டிடங்களை கட்டமைக்க, தற்போதுள்ள பயன்பாட்டு வசதிகளை இடித்து அகற்றுதல் மற்றும் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.734.91 கோடிக்கு தனியார் நிர்வனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திட்ட மேலாண்மை சேவைகளை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.14.56 கோடி செலவில் மேற்கொள்ளும். இரு முனைய கட்டிடங்களும் ஜி+3 கட்டமைப்பில் உலகத்தரத்திலான வசதிகளுடன் கட்டமைக்கப்படும்.

காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்ட்டர் பகுதி, வணிக வளாகம் மற்றும் கூரை மேடை போன்ற வசதிகள் இருக்கும். புறப்படும் பயணிகள் மற்றும் வரும் பயணிகளை தனித்தனியே பிரிக்கும் வசதி, பொருட்கள் மேம்பாலம், போதுமான லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் இருக்கும். வணிக வளாகம், கார் மற்றும் பைக் நிறுத்துமிடம், பட்ஜெட் ஓட்டல் ஆகிய வசதிகள் இருக்கும். பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் ஒரு சரக்கு அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை