நாமக்கல் மண்டலத்தில் தொடர் உயர்வு; முட்டை விலை 580 காசாக நிர்ணயம்: கடைகளில் ரூ7க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 580 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் முட்டை விலை ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் சுமார் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு, வாரம் 3 கோடி கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும் 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

கேரளாவுக்கு தினமும் 1 கோடி முட்டைகள் செல்கிறது. தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், நாமக்கல் முட்டைகள் தான் விற்பனைக்கு செல்கிறது. நாமக்கல்லில் கடந்த 1970ம் ஆண்டு காலகட்டத்தில் கோழிப்பண்ணைகள் துவங்கப்பட்டது. ஆண்டு தோறும், முட்டை விலை உயர்வும், சரிவும் மாறி மாறி வரும். நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே முட்டை விலை அதிகரித்து வருகிறது. கோழிப்பண்ணை வரலாற்றில் முதன்முறையாக, கடந்த 23ம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 570 காசாக உயர்ந்தது.

கோழிபண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக முட்டை விலை தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று மாலை 580 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் சென்னை,சேலம் உள்பட பல நகரங்களில் முட்டை ஒன்று ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு