முயற்சி திருவினையாக்கும்

மத்திய தொழிற்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ, பிடெக் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு, ஜேஇஇ நுழைவுத்தேர்வு மிகவும் அவசியமானது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இந்த தேர்வை நாடு முழுவதும் நடத்துகிறது. ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடத்தப்படும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. என்ஐடி, ஐஐடியில் சேர்வதற்கு ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது.

ஐஐடியில் சேர்வதற்கு மெயின், அட்வான்ஸ் தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். உயர்கல்வியில் சாதிக்க வேண்டும்; ஐஐடியில் சீட் கிடைக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். பலர் இதற்காக தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வு எழுதுகின்றனர். தனியார் பள்ளிகளில் தற்போது, இதற்கான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு பள்ளிகளில் படித்து, தமிழக அரசின் இலவச பயிற்சி மையத்தில் படித்த மாணவிகள் இம்முறை ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று, ஐஐடியில் படிக்க தேர்வாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சின்ன இலுப்பூர் கிராமத்தில் பழங்குடியினருக்காக அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவி ரோகிணி, ஜேஇஇ போட்டி தேர்வில் கலந்து கொண்டார். இத்தேர்வில் ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவி, ஒருவர் மாநில அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது இதுவே முதன்முறையாகும். இவருக்கு திருச்சியில் உள்ள என்ஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சீட் கிடைத்துள்ளது. ஜேஇஇ தேர்வுக்காக சிறப்பு பயிற்சி எதுவும் செய்யாமல், அரசு பள்ளியில் படித்து இந்த சாதனையை நிகழ்த்திய மாணவி ரோகிணிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இவரைப்போலவே, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கரியகோயில் வேலம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். பின் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட இலவச நுழைவுத்தேர்விற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். இங்கு பெற்ற சிறப்பான பயிற்சி மூலம் ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கும் திருச்சியில் சீட் கிடைத்துள்ளது. அதாவது, பழங்குடியின மாணவர்களில் மட்டும் 6 பேர் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் படித்தாலும் ஜேஇஇ போன்ற கடினமான நுழைவுத்தேர்வை எளிதாக எழுத முடியுமென இவர்கள் நிரூபித்துள்ளனர்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, சிறப்பு சலுகைகள், கணினிமயமாக்கல் உட்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு செய்து வருகிறது. புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகள், உயர்கல்வி படிக்க மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை அளிக்க தவப்புதல்வன் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் கல்வியில், தேசிய அளவில் தமிழக மாணவர்கள், தனிக்கவனம் பெற்று சாதனை படைப்பார்கள். இதற்கு கலங்கரை விளக்கமாக திராவிட மாடல் அரசு திகழும் என்றால்… அது மிகையல்ல.

Related posts

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 696 கனஅடி உபரி நீர் திறப்பு..!!

ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி!!

காவலர்கள் தாக்கியதால்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தனர்; முன்னாள் விசாரணை அதிகாரி பரபரப்பு சாட்சியம்