கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, டாஸ்மாக் கடைகளுக்கு கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்திருந்த உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில், ‘கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அவற்றை திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து கட்டிடங்களை வாடகைக்கு விட்டிருந்த நிலையில் திடீரென கடைகள் மூடப்பட்டதால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடுவது என்று விதிகள் வகுத்துள்ள நிலையில், அதை மீறி தங்கள் கட்டிடங்களில் செயல்பட்டு வந்த கடைகளும் மூடப்பட்டுள்ளது’ என்றார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘கடைகளை நடத்துவது குறித்தும், மூடுவது குறித்தும் அரசு தான் முடிவெடுக்க முடியும்.

கட்டிட உரிமையாளர்கள், தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தை நாட முடியாது’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களுக்கும், அரசுக்குமான தொடர்பு என்பது நில உரிமையாளர் – வாடகைதாரர் உறவுதான். தனது தொழிலை மூடுவது தொடர்பாக முடிவெடுக்க வாடகைதாரருக்கு முழு உரிமை உள்ளது. அரசின் முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் முறையிடலாமே தவிர வழக்கு தொடர முடியாது. இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

பொது நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது. கடைகளை மூடுவது குறித்து அரசு முடிவெடுக்கலாம். 500 டாஸ்மாக் கடைகளை மூடிய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. அதேசமயம், மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். இதுசம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம்’ என்று உத்தரவிட்டார்.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை