கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு சேர்க்கை மறுப்பு பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கோரினால் பரிசீலனை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கும்படி பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரித்துள்ளன எனக்கோரி கோவையைச் சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்க தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை மனுதாரர் தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முழுமையான விவரங்கள் இல்லாத நிலையில் பொதுப்படையாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் பரிசீலிக்கப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்