கல்வி உதவி தொகை 2 மடங்கு அதிகரிப்பு; படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தொடர்ந்து அறிவித்து மாற்றுத்திறனாளிகள் இதயங்களின் குடிகொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீது பெரிதும் கவனம் செலுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தையை இரு மடங்காக உயர்த்தியுள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.1000, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000, 9 முதல் 12ம் வகுப்பு வரை ரூ.6000, தொழில் கல்வி, முதுநிலை பட்டப்படிப்புக்கு ஆண்டிற்கு ரூ.7000 உயர்த்தி வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார்.

ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 50 மாணவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கும் வகையில், ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவனுக்கும் நெஞ்சார்ந்த நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம். கல்வி உதவித்தொகையை இரு மடங்குகளாக உயர்த்தியதால் ஆராய்ச்சி படிப்பில் சேரரும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை மாற்றுத்திறனாளிகளிடையே எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடர்ந்து வாரி வழங்கும் வரும் நிலையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற 4% இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆந்திராவில் 2 இடங்களில் விபத்து; பக்தர்கள் உள்பட 7 பேர் பலி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!