எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த எஸ்பிக்கு அபராதம்; விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தமிழ்நாடு முன்னாள் சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், உடந்தையாக இருந்த முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி 21ம் தேதி அப்போதைய முதலமைச்சர் நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் முதல்வர் செல்லக்கூடிய வழிகளில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் நின்றுகொண்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை சிறப்பு டிஜிபி தனது காரில் ஏற்றிக்கொண்டு முதலமைச்சர் பங்கேற்ற சில இடங்களுக்கு சென்றுள்ளார்.

பின்னர் பாதுகாப்பு பணி முடிந்த நிலையில், தனது காரிலேயே பெண் எஸ்பியை அவரது மாவட்டத்திலேயே இறக்கி விடுவதாக அழைத்து சென்றுள்ளார். ஆனால் அந்த மாவட்டத்துக்கு செல்லாமல் நாமக்கல் வழியாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வந்து இறக்கி விட்டுள்ளார். காரில் வரும்போது பெண் எஸ்பிக்கு சிறப்பி டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சென்னையில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க மறுநாள் சென்றபோது, அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், பெண் எஸ்பியின் காரை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளார். இதுகுறித்து பெண் எஸ்பி அளித்த புகாரின்பேரில், சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 2021 செப்டம்பர் 27ம் தேதி தாக்கல் செய்தனர். அதில், முன்னாள் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், கூடுதல் டிஜிபி, டிஐஜி, ஐஜி, எஸ்பிக்கள் மற்றும் காவல்துறையினர், சுங்கச்சாவடி ஊழியர்கள் என 127 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் 68 சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்தன. கடந்த 11ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் 3 தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று நீதிபதி புஷ்பராணி அறிவித்தார்.

அதன்படி நேற்று காலை 11 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், எஸ்பி கண்ணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். தொடர்ந்து நீதிபதி புஷ்பராணி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். சிறிது நேரத்திலேயே தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில் சிறப்பு டிஜிபிக்கு பாலியல் துன்புறுத்தல் பிரிவில் 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10,000 அபராதமும், தமிழ்நாடு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை தடுக்கும் சட்டம் பிரிவு 4ன் கீழ் 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10,000 அபராதமும், தடுத்து நிறுத்துதல் பிரிவில் ரூ.500 என மொத்தம் ரூ.20,500 அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

2வது குற்றவாளியான எஸ்பி கண்ணனுக்கு தடுத்து நிறுத்துதல் பிரிவில் ரூ.500 அபராதம் மட்டும் விதித்து உத்தரவிட்டார். 506(1) (மிரட்டல்) பிரிவில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றம் விதித்த அபராதத்தொகையை செலுத்தினார். பின்னர் தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சிறப்பு டிஜிபி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எஸ்பி கண்ணன் ரூ.500 அபராதம் செலுத்தி விட்டுச்சென்றார். தீர்ப்பையொட்டி நீதிமன்றத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி