எடப்பாடி ஆட்சியை சரியில்லை என பிரதமர் கூறியிருக்க வேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் திடீர் குண்டு

திண்டுக்கல்: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை பாராட்டிய பிரதமர், எடப்பாடி ஆட்சியையும் பாராட்டி இருக்க வேண்டும். இல்லையென்றால் சரியில்லை என்று சொல்லியிருக்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் திடீரென டென்ஷனாக பேசியதைக் கேட்டு, பொதுக்கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடைகளில் பேசும்போது, எதையாவது பேசி எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல; சொந்தக் கட்சியினரையே அதிர்ச்சியடையச் செய்வார்.

இந்நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: தமிழகத்திற்கு 17 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரட்டும். தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியைப் பாராட்டி உள்ளார்.

ஆனால், 4.5 ஆண்டு காலம் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியை பாராட்டவில்லை. அவரை பாராட்டியிருந்தால் சரியான அளவு கோலாக இருந்திருக்கும். அல்லது அவரது ஆட்சி சரியில்லை என கூறியிருக்க வேண்டும். 4.5 ஆண்டு கால ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் பாராட்டி பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதைக்கேட்டு கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு மனுஷன் எதையாவது பேசுறாருப்பா என சலித்துக் கொண்டனர்.

உளறல் மயம்: நேற்றைய பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்பொது, ‘நடக்கப்போவது மக்களவை தேர்தலா அல்லது சட்டமன்ற தேர்தலா என தெரியாமல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை மறந்து கருணாநிதி என பேசினார். எடப்பாடி ஆட்சியில் கொண்டு வந்தது 11 மருத்துவக் கல்லூரி என்பதற்கு பதிலாக 17 மருத்துவக்கல்லூரிகள்’ என்றார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?