பாஜவின் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

சென்னை: பாஜவின் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கும் விதமாக அனைத்து கட்சிகளும் தொடர்ந்து தீவிரமாக செயலாற்றி வருகின்றன. குறிப்பாக, பாஜ தலைமையிலான ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து ஓர் அணியாக திரண்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பீகாரில் முதல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று மற்றும் நாளை பெங்களூரில் 2வது கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் இணைந்து நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அதற்கான அழைப்புகள் ஏற்கனவே, கூட்டணி கட்சிகளுக்கு பாஜ அனுப்பி உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளார். முதலில் இக்கூட்டத்துக்கு அதிமுக கட்சியில் இருந்து மூத்த தலைவர்களை அனுப்ப இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையிலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூட்டத்தில் அழைப்பு விடுக்காத நிலையிலும் தானே டெல்லி செல்வதென முடிவெடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல, தமிழகத்தில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித்பவார் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு