தோல்வியையே தன் கட்சிக்குப் பரிசாக அளிக்கும் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பற்றி பேச அருகதை இல்லை: ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை: தோல்வி மேல் தோல்வியையே தன் கட்சிக்குப் பரிசாக அளிக்கும் தோல்விசாமி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றிப் பேச அருகதை இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கை: பொதுக்குழு என்ற பெயரால் பொழுதுபோக்குக் கச்சேரியை நடத்தி முடித்திருக்கிறார் பழனிசாமி. அதில் திமுக அரசைப் பற்றி வாய்க்கு வந்ததை உளறி இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான பல குற்றச்சாட்டுகளைப் பழனிசாமி வைத்துள்ளார். பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

சசிகலாவின் பொம்மையாக எடப்பாடி முதலில் இருந்தார். டிடிவி தினகரனின் பொம்மையாக மாறினார். பின்னர் மோடியின் பொம்மையாக மாறினார். கமலாலயத்தில் ஒரு அறையில் அதிமுக அலுவலகத்தை நடத்தி கொள்ளும் வகையில் பாஜவுக்கு அடிமையாக சேவகம் செய்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவர். இப்போதும், அமித்ஷா ஆட்டுவிக்கும் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மையாகச் செயல்பட்டு வருபவர்தான் பழனிசாமி என்பதை அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள்.

அதிமுக ஆட்சி எப்போது வரும் என்ற மன நிலையில் மக்கள் இருப்பதாக பழனிசாமி பேசி இருக்கிறார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019ல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என 8 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது.

எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி. அவரால் அதிமுகவை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப் போகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியைத் தழுவி ‘தோல்விசாமி’ என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா