எடப்பாடி ஆட்சியில் ரூ.1.17 கோடி மோசடி: 5 பேர் கைது, அதிமுக நிர்வாகியிடம் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த 2020-2021 கால கட்டத்திற்கான வரவு-செலவு தணிக்கை ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 2020-21 கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வு விளம்பரம் மற்றும் கூடுதல் செலவுகள் செய்ததாகவும், அதிகாரிகள் அனுமதியின்றி பால் உற்பத்தியாளர் சங்க நிதியில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 104 மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ் புகார் அளித்தார். புகாரின்பேரில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வனராஜ், முன்னாள் மேற்பார்வையாளர் ஜெயவீரன், முன்னாள் மேலாளர் முருகேசன், முன்னாள் தளவாய்புரம் பொறுப்பு தலைவர் தங்கமாரியப்பன், ராஜலிங்கம், பன்னீர்செல்வம், காளிராஜ், சிவா ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் தேடுதலை தொடர்ந்து அனைவரும் தலைமறைவாகினர்.

இவர்கள் ராஜபாளையத்தில் அவரவர் வீடுகளில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீசார் முருகேசன், ராஜலிங்கம், தங்கமாரியப்பன், பன்னீர் செல்வம், காளிராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, இருவரையும் மறு விசாரணைக்கு அழைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள சிவா என்பவரை தேடி வருகின்றனர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை