தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் கூட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2வது முறையாக பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன.

இதற்கு போட்டியாக பாஜக தனது பலத்தை காட்டும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து பிராந்தியங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் பாஜ தனது கூட்டணி கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது பலத்தை காட்டப் போவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை விட அதிகமாக 38 கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 38 கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் எடப்பாடிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்திற்குபிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (19ம் தேதி) தமிழ்நாடு திரும்புகிறார். டெல்லியில் இருந்து அவர் நேராக கோயம்புத்தூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு