எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள் குறித்து மோடியிடம் ஊழல் பட்டியல் ஓபிஎஸ் வழங்கினார்: டெல்லியில் அடுத்தவாரம் சந்திக்க அழைப்பால் பரபரப்பு

சென்னை: பாஜ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறிய பிறகு, அவர் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியலை மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருச்சி விமானநிலையத்தில் வைத்து வழங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ கூட்டணியில் அதிமுக இருந்தபோது அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க, டெல்லி மேலிடம் மறுத்து விட்டதால், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

தற்போது சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக சிறுசிறு அமைப்புகளுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டபோது எடப்பாடிதான் முக்கியம் என்று பாஜ கருதி, அவருடன் பேச்சுவார்த்தையை அமித்ஷா நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்தனர். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் இதற்கெல்லாம் அண்ணாமலைதான் காரணம் என்று அவர் மீது தாக்குதல் நடத்தி வந்தார்.

இந்நிலையில் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், பாஜவுடன் கூட்டணி அமைப்பதோடு அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தற்போது இறங்கியுள்ளார். இதற்காக பாஜ தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் திருச்சிக்கு பிரதமர் மோடி நேற்று காலையில் வந்தார். அவரை வரவேற்க வரும்படி பல்வேறு தரப்பில் இருந்து எடப்பாடிக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் அவரது எதிரணியைச் சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அவருடன் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், கே.கே.செல்வக்குமார் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் மோடியை வரவேற்றனர். பின்னர் மோடி லட்சத்தீவுக்கு புறப்படும்போதும் வழியனுப்புகிறவர்களின் பட்டியலிலும் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெற்றார். அப்போது, மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தில், எடப்பாடி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு நாட்களுக்கு முன்னர் ஈரோட்டில் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘நான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்வார்’’ என்று மிரட்டியிருந்தார். அதோடு ‘‘முன்னாள் அமைச்சர்கள் பலரும் சிறைக்கு செல்வார்கள்’’ என்றார். மோடியுடனான சந்திப்பை கருத்தில் கொண்டே அவர் அவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது. அவர் சொன்னதுபோலவே முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது, ஓ.பன்னீர்செல்வத்திடம், அடுத்த வாரம் டெல்லியில் வந்து தன்ைன சந்திக்கும்படியும், அதற்காக விரைவில் நேரம் ஒதுக்கி, உங்களுக்கு அழைப்பு அனுப்பப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குஷியடைந்த ஓ.பன்னீர்செல்வம், விமானநிலையத்தில் இருந்து புன்னகையுடன் புறப்பட்டுச் சென்றார். அதிமுக கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் தற்போது மோடியை வரவேற்க சென்று விட்டன. இதனால் தற்போது அதிமுக தனி மரமாக நிற்கிறது. அதேபோல புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மட்டும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

அவர் உடல்நிலை குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் பட்டியலை வழங்கியுள்ளதால், விரைவில் அவர்கள் மீதெல்லாம் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. இதனால் ஓரிரு நாளில் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்களும், அதிமுகவில் இருந்து பலர் வெளியேறும் நிலையும் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவை உடைக்கும் முயற்சியை பாஜ தொடங்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

* அருகில் நிற்க நினைப்பவர்கள் வரதேவையில்லை: அண்ணாமலை
திருச்சி விமானநிலையத்தில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறும்போது, ‘‘திருச்சி வரும் பிரதமரை வரவேற்க இ.பி.எஸ்.  வரவில்லை என நாங்கள் வருத்தப்படவில்லை. பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி அருகில் நிற்க நினைப்பவர்கள் வரவேற்க வர தேவையில்லை. பிரதமர் மோடியை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் வரவேற்க வந்தால் போதும்’’ என்றார்.

Related posts

சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னையில் குழந்தை திருமணம்: 18 புகார்கள் பதிவு

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்