அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகப்படுத்தி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி

திருச்சி: அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகப்படுத்தி திருச்சியில் பிரசாரத்தை எடப்பாடி தொடங்கினார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மேலும், புதுச்சேரியிலும் தனித்து போட்டியிடுகிறது.

திருச்சியில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தின் சார்பிலும் கூட்டணி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல் பிரச்சாரத்தை இன்று தொடங்கி இருக்கிறோம்.

இந்த தோ்தலில் 3 பிரதான கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது. அதில், அதிமுக, திமுக, பாஜ போட்டியிடுகிறது. ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் அதிமுக, திமுக இடையே தான் என்பதை இந்த நாடு அறியும். தமிழக மக்களும் அறிவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவரையும் நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். எறும்பை போல, தேனீயை போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். பாஜவை எதிர்ப்பதாக என்று கூறி வரும் எடப்பாடி பிரசாரத்தில் மறந்து கூட பாஜ பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜவுடன் கூட்டணியை முறித்து கொண்ட நிலையில், சமீபத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அடுத்தடுத்து மாஜிக்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரெய்டுக்கு அஞ்சி எடப்பாடி பாஜவை விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

* நல்ல நேரம் பார்த்து…
எந்த தேர்தலாக இருந்தாலும் தன்னோட பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு தனது இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்வதை எடப்பாடி பழனிசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார். அதன்படி, திருச்சிக்கு புறப்படுவதற்கு முன் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, இடைப்பாடி தொகுதியில் உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோயிலில், எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டத்தில் பங்கேறக திருச்சிக்கு சென்றார். பரப்புரையை நல்ல நேரத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காக நேற்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ராகுகாலம் என்பதால் ராகுகாலம் முடிந்த பின் எடப்பாடி பழனிச்சாமி மேடைக்கு வந்தார். பின்னர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பரப்புரை தொடங்கினார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்