எடப்பாடி பிடிவாதம் எதிரொலி; 3 முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க திட்டம்..? டெல்டா அதிமுகவில் பரபரப்பு

திருச்சி: டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 3 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி, பொது செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது.

எனவே அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், இவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வமோ அதிமுகவில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சந்தித்து பேசினர். அப்போது ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்ப்பதன் மூலம் கட்சி வலுப்பெற வாய்ப்புள்ளதாக மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை சேர்க்க திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.

இந்த சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சில முன்னாள் அமைச்சர்கள், சசிகலாவை விரைவில் சந்திக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது காரில் திருச்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தஞ்சை வரை சென்றுள்ளனர். அப்போது சசிகலாவை, அதிமுகவில் சேர்ப்பதில் என்ன தவறு என காமராஜ், எடப்பாடியிடம் கேட்டாராம். இதை ஆமோதிப்பது போல், விஜயபாஸ்கரும் தலையாட்டி உள்ளார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லையாம்.

இதனால் எடப்பாடி மீது அதிருப்தியடைந்த காமராஜ், சிங்கப்பூர் சென்று விட்டார். தனது பேரக்குழந்தையை பார்க்க சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்பட்டாலும், எடப்பாடி மீதான அதிருப்தியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் டெல்டாவில் 2 முன்னாள் அமைச்சர்கள், தென் மாவட்டத்தில் ஒருவர் என 3 மாஜிக்கள் விரைவில் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் போர்க்குரல் வெடிக்கும் என்றனர். மாஜி அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறப்படும் தகவல், அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திவாகரன் ஏற்பாடு
சசிகலாவின் தம்பி திவாகரன், சென்னை போயஸ்கார்டனில் உள்ள சசிகலாவின் இல்லத்திலேயே கடந்த 2 மாதமாக தங்கி உள்ளாராம். அவர் தனக்கு வேண்டிய, தங்களால் ஆதாயமடைந்த முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். பாஜ மேலிடத்தின் ஆசியுடன் இவர் தான், சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்