டெல்லி மதுபான கொள்கை வழக்கு முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் ஈடி காவல்: விசாரணை நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.

இந்த சம்மன்களை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க, எந்த உத்தரவும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 9.05 மணி அளவில் அவரை கைது செய்தனர். நேற்று காலை கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் பிற்பகலில் அந்த மனுவை கெஜ்ரிவால் தரப்பில் வாபஸ் பெற்றுவிட்டதால் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர் படுத்தினார்கள். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 10 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அப்போது இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது.

அமலாக்கத்துறை தரப்பில்,’ டெல்லி கலால் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் முக்கிய சதிகாரர். அவர் அமைச்சர்கள், ஆம்ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்தார். ​​டெல்லி கலால் கொள்கை 2021ஐ வகுத்து செயல்படுத்துவதற்காக கெஜ்ரிவால் ‘தெற்கு குழு’விடமிருந்து பல கோடி ரூபாயை பரிசாக பெற்றார். மேலும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்காக தெற்கு குழுவில் குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் அவர் ரூ.100 கோடி கேட்டுள்ளார்.

மேலும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ரூ. 45 கோடி பணம் நான்கு ஹவாலா வழிகளில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அழைப்பு விவர பதிவுகள் (சிடிஆர்) மூலம் இவை எல்லாம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கெஜ்ரிவாலிடம் மேற்கொண்டு விசாரிக்க 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். ஆம் ஆத்மி ஒரு தனிநபர் அல்ல. ஒரு நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் நடத்தைக்கு அதில் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள்’ என்று வாதிட்டார். கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்திய வரலாற்றில் முதல் முறையாக பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. கைது செய்வதற்கான அதிகாரம் கைது செய்ய வேண்டிய தேவைக்கு சமமானதல்ல. கெஜ்ரிவாலை இந்த வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எனவே தயவுசெய்து காவலில் வைப்பதை ஒரு வழக்கமான ஒன்றாக பார்க்க வேண்டாம். ஜனநாயகத்தின் பெரிய பிரச்னைகள் இதில் அடங்கி உள்ளன’ என்றார். கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான இன்னொரு வக்கீல் விக்ரம் சவுத்ரி கூறுகையில், ‘ அமலாக்கத்துறை நீதிபதியாகவும், நீதிமன்றமாகவும், மரணதண்டனை வழங்கும் இடமாகவும் மாறிவிட்டது’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காவேரி பவேஜா வரும் மார்ச் 28ம் தேதி வரை முதல்வர் கெஜ்ரிவாலை 7 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் அன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர் உத்தரவிட்டார்.

* சிறையில் இருந்தாலும்
நாட்டுக்காக உழைப்பேன்: கெஜ்ரிவால்
கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் நேற்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “நான் சிறையில் இருந்தாலும், சிறைக்கு வௌியே இருந்தாலும் என் வாழ்க்கை தேசத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டு மக்களுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன்” என்று சூளுரைத்தார்.

* இந்தியா பதிலடி கொடுக்கும் ராகுல்காந்தி ஆவேசம்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது: பயந்துபோன சர்வாதிகாரி இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, பிரதான எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவது ‘அசாதாரண சக்தி’க்கு போதாதென்று, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் கைது செய்வதும் சகஜமாகி விட்டது. விஷயம். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்