பொருளாதார குற்றப்பிரிவில் 800க்கும் மேற்பட்டோர் புகார்; மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 300 கிலோ தங்கம் எங்கே..? மோசடி மன்னன் தேவநாதன் யாதவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 300 கிலோ தங்கம் குறித்து கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் தேவநாதனிடம் 2வது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது. இதனால், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ₹525 கோடி முதலீடு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரியாக முதிர்வு தொகை மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளனர். மேலும், நிதி நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது.இதனால் பாதிக்கப்பட்ட 144 முதலீட்டாளர்கள் ஒன்றாக சேர்ந்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல நூறு கோடி மோசடி செய்து இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான தேவநாதன் யாதவ், அவரது கூட்டாளிகளானகுனசீலன், மகிமைநாதன், சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி கைது செய்தனர்.மேலும், நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவுக்கு சொந்தமான 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம் மற்றும் பல கோடி மோசடி செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. அதனை தொடர்ந்து நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ் நடத்தி வந்த தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தையும் மூடி சீல் வைக்கப்பட்டது.

பின்னர் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி தேவநாதன் யாதவுக்கு சொந்தமான 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. இதற்கிடையே தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த முதலீட்டார்கள் 800க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் தேவநாதன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் படி பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பொருளாதார குற்றப்பிரிவு தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதன்மீது நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக தேவாநாதன், குனசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரிடம் 7 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை நேற்று முன்தினம் முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது நிதி நிறுவன முன்னாள் நிர்வாகிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த 300 கிலோ தங்கம் எங்கே, 2017ம் ஆண்டுக்கு பிறகு தென் மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்ததற்கான பணம் எங்கிருந்து வந்தது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் நிதி நிறுவன வங்கி கணக்கில் இருந்து பரிமாற்றப்பட்டதற்கான காரணம் ஏன்? 150 ஆண்டுகள் லாபத்தில் இயங்கி வந்த நிதி நிறுவனம், தற்போது முதலீட்டார்களுக்கான முதிர்வு தொகை கொடுக்க கூட பணம் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதனிடம் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு பிறகு தான் தேவநாதன் எத்தனை கோடி ரூபாய் நிதி நிறுவனத்தின் மூலம் மோசடி செய்துள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தலைமறைவாக உள்ள தேவநாதனின் வலது கரமான சாலமன் மோகன்தாஜை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

திரிணாமுல் எம்பி ராஜினாமா

பீகாரில் 21 குடிசைகள் தீ வைத்து எரிப்பு 15 பேர் கைது

ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி வீட்டில் என்ஐஏ சோதனை