எச்சூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை கட்டி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பயணியர் நிழற்குடை இல்லாததால் சாலையோரம் உள்ள மரத்தடியில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிற்கின்றனர். எனவே, நிழற்குடை கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம், அடுத்த எச்சூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய சாலைகள் இணையும் இடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து பயணியர் நிழற்குடை ஊராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டது. இதனை, முன்பு இருந்த ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால் நிழற்குடையில் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்து காட்சிப் பொருளாக காணப்பட்டது.

மேலும், பாழடைந்த நிழற்குடையில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உலா வருவதால் பயணிகள் அங்கு செல்ல அச்சப்பட்டனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணியர் நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக ஒரு நிழற்குடை கட்டித் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால், புதிய நிழற்குடை கட்டுவதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மேலும், நிழற்குடை இல்லாததால் அப்பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் அங்கு சாலையோரம் உள்ள மரத்தடியிலும், சாலையிலும் பேருந்துக்காக ஆபத்தான முறையில் நிற்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஏற்கனவே உள்ள பழைய நிழற்குடை இடித்து அகற்றப்பட்ட அதே இடத்தில், புதிய நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு