உடன்குடி அருகே 800 கிலோ கருப்பட்டி கொள்ளை

*மினிடெம்போவில் தப்பியவர்களுக்கு வலை

உடன்குடி : உடன்குடி அருகே 800 கிலோ கருப்பட்டியை மர்மநபர்கள் மினிடெம்போவில் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கைபண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(40). கந்தபுரம் பகுதியில் பனை தொழில் செய்து வருகிறார். 15 பனை தொழிலாளர்களை கொண்டு பனை ஏறி பதநீர் எடுத்து காய்ச்சி கருப்பட்டி, கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி நள்ளிரவு இவரது பதநீர் காய்ச்சும் இடமான விடிலிக்கு மினிடெம்போவில் வந்த மர்மநபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ எடையுள்ள கருப்பட்டியை மினிடெம்போவில் ஏற்றினர். அப்போது சத்தம் கேட்டு அப்பகுதியில் தங்கியிருந்த பனை ஏறும் தொழிலாளர்கள் திரளவே மர்மநபர்கள் மினிடெம்போவுடன் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து சுரேஷ்குமார், மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மினிடெம்போவில் 800 கிலோ கருப்பட்டியை கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன கருப்பட்டியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு