மக்களுக்கு எது முக்கியம்? எளிதான ரயில் பயணமா? மோடியுடன் செல்பியா?: ராகுல் கண்டனம்

புதுடெல்லி: மக்கள் எளிதான ரயில் பயணத்தை விரும்புகிறார்களா? அல்லது ‘மாமன்னருடன்’ செல்பி எடுப்பதை விரும்புகிறார்களா?’ என ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் ரயில் நிலையங்களில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் செல்பி எடுப்பதற்கான தற்காலிக மற்றும் நிரந்தர செல்பி பூத்கள் அமைக்கப்பட்ட நிலையங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த தகவல்கள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனு மூலம் தெரியவந்தது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஏழைகள் பயணம் செய்யும் ரயிலில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்குட்ப்பட்ட கட்டண சலுகையையும் ரயில்வே நிறுத்திவிட்டது.

பிளாட்பார்ம் டிக்கெட்டை உயர்த்திவிட்டது. தனியார்மயமாக்கலுக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்களை கசக்கிப்பிழிந்து அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாங்குவது இதுபோன்ற செல்பி ஸ்டாண்டுக்காகவா? இந்திய மக்கள் எதை விரும்புகிறார்கள்? மலிவான காஸ் சிலிண்டர் மற்றும் எளிதான ரயில் பயணங்களா? அல்லது ‘மாமன்னர்’ சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதையா?’’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.முன்னதாக, இதே விவகாரத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தேசிய தலைவர்கள், வெள்ள நிவாரணத்திற்கு நிதி தர முடியாத ஒன்றிய அரசு செல்பி பூத் வைத்து வெறுமனே வீணடிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை