மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்காதவர்களுக்கு ஜூன் மாதம் முழுவதும் சேர்த்து வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறப்பு பொது வழங்கல் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 என்ற விலையிலும், ஒரு கிலோ பாமாயில் ரூ.25 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஏப்ரல் மாத மத்தியிலிருந்து நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடமிருந்து துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை பெறப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கடந்த மே 27ம் தேதி தமிழக அரசின் பொது வழங்கல் துறை விளக்கமளித்தது.

மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அவற்றை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால், ஜூன் முதல் வாரம் அடுத்த சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் மே மாதத்திற்கான துவரம்பருப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. சில கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்பட்ட நிலையில், பாமாயில் வழங்கப்படவில்லை, பாமாயில் வழங்கப்பட்ட கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. எனவே, மே மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஜூன் மாதத்தில் அவற்றையும் சேர்த்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்