கடமை தவறக்கூடாது

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்க துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாலும், அவர் வகித்து வந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிவிடவும், அவரை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதற்கான பரிந்துரைகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பினார். ஆனால், இவற்றை ஏற்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார்.

அரசியல் சட்டப்பிரிவு 163-ன் படி, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் கடமையாற்ற வேண்டும். மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரம் ஆகும். இதில் ஆளுநர் தலையிட, அரசியல் சட்டத்தில் இடமில்லை. இதுபோன்று பல நிகழ்வுகளில், அரசியல் சட்ட மரபுகளை தொடர்ந்து மீறி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் நடந்துகொள்வது வேதனைக்குரியது என்ற விமர்சனங்களும் கூடவே எழுந்துள்ளன. ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொண்டு, தமிழ்நாடு முதல்வர் மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அதில் அமைச்சர்களின் இலாகா மாற்றத்துக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர், தேவையின்றி மூக்கை நுழைப்பது, உடைபடுவது என்பது அவருக்கு புதிதல்ல. பலமுறை இதுபோன்ற தோல்விகளை அவர் சந்தித்துள்ளார். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறுத்தி வைத்து, பின்னர் வேறு வழியே இல்லாமல் ஒப்புதல் அளித்து, அவமானப்பட்டுக்கொண்டார். அதே நிலைதான் தற்போதும் ஆளுநருக்கு உருவாகியுள்ளது. அமைச்சர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் முதலமைச்சரின் பரிந்துரைப்படி ஆளுநர் எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படித்தான் செயல்பட வேண்டும்.

அமைச்சரவையில் ஒருவர் இடம்பெறக்கூடாது எனக்கூற, ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சட்டப்படி உரிமையும் இல்லை. அமைச்சர் ஒருவர் விசாரணையை சந்திப்பது, அவரது அமைச்சர் பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது. இதை உணர்ந்து, ஆளுநர் செயல்படுவது நல்லது. அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்துவைத்து, அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டிய ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுவது, நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். ஆளுநரின் இந்த வீண் பிடிவாதம் என்றும் நிலைக்காது.

அரசுக்கு எதிராக, எந்த சக்திகள் செயல்பட்டாலும் அந்த சக்திகள் தோற்கடிக்கப்படும் என்பதே தமிழகத்தின் கடந்தகால வரலாறு. அரசியல்ரீதியாக, ஒன்றியத்திலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் நடுநிலையுடன், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர். அந்த வகையில் குடியரசு தலைவர்தான் ஆளுநரின் தலைவர். இதை உணர்ந்து, ஆளுநர் தனது கடமையை சரியாக ஆற்ற வேண்டும்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்