தசரா திருவிழாவை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோயிலில் மாலை அணிய குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: தசரா திருவிழாவை முன்னிட்டு புனித விரதம் துவங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் குவிந்தனர். உலக அளவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டுக்கான தசரா திருவிழா வரும் அக். 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் சிகரமான மகிஷாசூரசம்ஹாரம் வரும் அக். 12ம் தேதி குலசை கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும். தசரா திருவிழாவை முன்னிட்டு வேடம் அணியும் பக்தர்கள் 41 நாள், 31 நாள், 21 நாள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் இருந்து வேடம் அணிவது வழக்கம். இதில் பெரும்பாலான பக்தர்கள் 21 நாள் விரதத்தை விரும்பி மேற்கொள்கின்றனர்.

நேற்று (செப். 22ம்தேதி) முதல் வரும் அக். 12ம் தேதி வரை 21 நாட்கள் வரும். இதை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று அதிகாலை முதல் குலசேகரன்பட்டினத்திற்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்து விரதம் துவங்கினர். காளி வேடம் அணியும் பக்தர்கள் கிரீடம், சூலாயுதம், சடை முடி போன்ற பொருட்களை 21 நாளும் பூஜையில் வைத்து வழிபடுவதால் தசரா பொருட்கள் வாங்க உடன்குடி பஜார் வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம்: இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு சிபிஎம் வாழ்த்து

நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது சோயுஸ் MS 25 விண்கலம்

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு