திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 29வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்து மண்டல இணை ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். குறிப்பாக, 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகள், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் (Master Plan) கீழ், 15 கோயில்களில் நடந்து வரும் பணிகள், ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டிற்கு மேல் நடந்து வரும் பணிகள், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தங்கத்தேர், வெள்ளித் தேர், மர தேர்கள் மற்றும் தேர் மராமத்து பணிகளின் தற்போதைய நிலை, திருக்குளங்களை புனரமைக்கும் பணிகள், மலைக்கோயில்களில் செயல்படுத்தப்படும் ரோப் கார் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கான ஏற்பாடுகள், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள், துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திடும் வகையில் மண்டல இணை ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சட்டமன்ற அறிவிப்புகளை குறித்த காலத்தில் நிறைவேற்றிட பணித் திட்டம் வகுத்து செயலாற்றிடவும், அவ்வப்போது களஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். கோயில்களின் திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகளவில் தரிசனத்திற்கு வருவதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை