துலீப் டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது மத்திய மண்டலம்: சவுரவ் சுழலில் மூழ்கியது கிழக்கு

ஆலூர்: துலீப் டிராபி காலிறுதியில் கிழக்கு மண்டல அணியை 170 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மத்திய மண்டல அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஜூன் 28ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மத்திய மண்டலம் முதல் இன்னிங்சில் 182 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல பந்துவீச்சில் மணிசங்கர் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 122 ரன்னுக்கு சுருண்டது.
60 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய மத்திய மண்டலம் 87.5 ஓவரில் 239 ரன் குவித்து ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்கள் ஹிமான்ஷு மந்த்ரி 68, விவேக் சிங் 56 ரன், சுபம் சர்மா 23, சரன்ஷ் சிங் 32* ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 300 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கிழக்கு மண்டலம், 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 129 ரன்னுக்கு சுருண்டது (41.2 ஓவர்). மத்திய மண்டலம் 170 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் சவுரவ் குமார் 18.2 ஓவரில் 3 மெய்டன் உள்பட 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் வீழ்த்திய சவுரவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அரையிறுதி மோதல்: ஆலூரில் ஜூலை 5ம் தேதி தொடங்கும் முதல் அரையிறுதியில் மேற்கு மண்டலம் – மத்திய மண்டலம் மோதுகின்றன. அதே நாளில் பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் 2வது அரையிறுதியில் தென் மண்டல அணியுடன் வடக்கு மண்டலம் பலப்பரீட்சையில் இறங்குகிறது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்