துபாய் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த செங்கை மாணவன்

செங்கல்பட்டு: துபாயில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் செங்கல்பட்டு அருகே மறைமலைநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். துபாய் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் 8வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 9 நாடுகளில் இருந்து மொத்தம் 18 பேர் பங்கேற்றனர்.

இதில் இந்தியா சார்பில் ஓட்டப்பந்தயப் போட்டியில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே சட்டமங்கலத்தை சேர்ந்த ஷெல்டன் ஜான் (21) என்ற தனியார் கல்லூரி மாணவர் பங்கேற்றார். இதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஷெல்டன் ஜான் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே நேபாள நாட்டில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.

இதுகுறித்து கல்லூரி மாணவர் ஷெல்டன் ஜான் கூறுகையில், துபாயில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில், நான் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பங்கேற்க ரூ.1 லட்சம் செலவானது. தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய என்னை வரவேற்க யாரும் வரவில்லை. எனினும், அடுத்தடுத்து ஓட்டபந்தயப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெறுவதே எனது லட்சியம். இதற்கு ஒன்றிய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி