கேரளாவில் ரவுடியின் வீட்டில் மது விருந்து சோதனைக்கு வந்த போலீசை பார்த்து கழிப்பறைக்குள் பதுங்கிய டிஎஸ்பி

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே பிரபல ரவுடியின் வீட்டுக்கு மது விருந்துக்கு சென்ற டிஎஸ்பி, சோதனைக்கு வந்த போலீசை பார்த்து பயந்து கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டார். எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் தம்மனம் பைசல். பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கொச்சியில் இவர் மீது தான் முதன் முதலாக குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இதன்பின் 1 வருடம் கொச்சி ஊருக்குள் நுழைய இவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தம்மனம் பைசலின் வீட்டில் மது விருந்து நடைபெறுவதாகவும் அதில் ரகசியமாக சிலர் கலந்து கொள்வதாகவும் அங்கமாலி போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கமாலி சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தம்மனம் பைசலின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரவுடியின் வீட்டில் மது விருந்தில் கலந்து கொள்ள வந்தது ஆலப்புழா குற்றப்பிரிவு டிஎஸ்பி சாபு தலைமையிலான போலீசார் என தெரியவந்தது.

சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசைக் கண்டதும் டிஎஸ்பி சாபு, பைசலின் வீட்டிலுள்ள கழிப்பறையில் ஒளிந்து கொண்டார். டிஎஸ்பி சாபு தலைமையில் 4 போலீசார் விருந்துக்கு வந்திருந்தது தெரியவந்தது. சோதனைக்கு வந்த அங்கமாலி போலீசார் ரவுடி தம்மனம் பைசல் உள்பட 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கமாலி போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விருந்தில் கலந்து கொண்ட 2 போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டிஎஸ்பி சாபு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர் இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு