குடி போதையில் கொடுமைப்படுத்திய கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை-திண்டிவனம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திண்டிவனம் : திண்டிவனம் டி.வி. நகரில் வசித்து வருபவர் தட்சணாமூர்த்தி மகன் சேது(எ)சேதுபதி(23). இவர் புதுச்சேரியில் உள்ள பஞ்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி(19), என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதே பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியே வசித்து வந்தனர். திருமணமாகி 20 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில் 1.8.2019ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சேதுபதி வீட்டினுள் படுத்திருந்தபோது, குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகி சேதுபதி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சேதுபதியின் வீடு தீப்பிடித்து எரிந்தபோது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சேதுபதியின் மனைவி முருகவேணியிடம் விசாரணை மேற்கொண்டபோது, குடி போதைக்கு அடிமையான சேதுபதி தன் மனைவி முருகவேணியை பலவிதத்தில் கொடுமைபடுத்தியுள்ளார்.

இதனால் போதையில் படுத்திருந்த சேதுபதி மீது முருகவேணி, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து, வீட்டுக்கு வெளியே வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டியது தெரியவந்தது. இதையடுத்து முருகவேணியை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ரகுமான் முருகவேணிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு முருகவேணியை அழைத்து சென்று அடைத்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை