குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் மருமகளுடன் சேர்ந்து மகனை சரமாரி வெட்டிக்கொன்ற தந்தை

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(44), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(40). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் தினந்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். அதேபோல், நேற்று முன்தினம் இரவும் சசிகுமார் குடிபோதையில் வந்து மனைவி லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த சசிகுமாரின் தந்தை சுப்பிரமணி(70) அவரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சசிகுமார் மனைவி லட்சுமி மற்றும் தந்தை சுப்பிரமணியை சரமாரி தாக்கியுள்ளார். பதிலுக்கு லட்சுமியும், சுப்பிரமணியமும் சேர்ந்து சசிகுமாரை தாக்கியுள்ளனர்.

அப்போது, ஆத்திரத்தில் இருந்த லட்சுமி, கணவன் சசிகுமாரின் தலையை இறுக பிடித்துக்கொண்டுள்ளார். உடனே சுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மகன் சசிகுமாரின் முகம் மற்றும் வாய் பகுதியில் சரமாரி வெட்டி உள்ளார். இதில் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சசிகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து லட்சுமி, சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்