டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நிலப்பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 7 பேரும் மரண தண்டனையை எதிர்த்தும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டு சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை’ என்றார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, இன்று தீர்ப்பளித்தனர். அதன்படி, இந்த தீர்ப்பில், தண்டனையை உறுதி செய்ய அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே, இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் அபராதம் கட்டியிருந்தால் அதை திரும்ப தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு