ரூ.30 லஞ்சம் தர மறுத்ததால் ஓட்டுநரை சரமாரி தாக்கிய வனவர், காவலர் சஸ்பெண்ட்

சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடியில் 30 ரூபாய் லஞ்சம் தர மறுத்த ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய வனவர், காவலர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சோதனைச்சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓட்டுனரிடம் சோதனைச்சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவரும் 30 ரூபாய் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். லஞ்சம் தர மறுத்ததால் ஓட்டுனரை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இது குறித்து வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதை தொடர்ந்து, சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது லஞ்சம் கேட்டு ஓட்டுனரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை