குடிநீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல்: ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சுதர்சனன். சம்பவத்தன்று இவர், கடலூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் வாங்கியுள்ளார். மினரல் வாட்டர் பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.20 என்று குறிப்பிட்டிருந்தும், அதற்கு ஜிஎஸ்டி ரூ.1 சேர்த்து ரூ.21 பெற்றுள்ளனர். இதுகுறித்து சுதர்சனன், ஜிஎஸ்டி தொகையை சேர்த்துதான் எம்ஆர்பி விலை எனவும், மேற்கொண்டு ஜிஎஸ்டி ஏன் வாங்குகிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் சரிவர பதில் சொல்லாமலும், அந்த தவறை சரிசெய்யாமலும் இருந்ததால் அவர், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் ஓட்டலில் முறையற்ற வர்த்தகம் செய்வதாகவும், அது மாதிரியான முறையற்ற வர்த்தகம் செய்வதை தடை செய்யவும், நஷ்டஈடு கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று, விசாரணையின் முடிவில், ஓட்டல் ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் சட்ட அளவியல் வழிகாட்டுதல்களை மீறி, அனைத்து வரிகள் உட்பட அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருள் மீது, மேலும் ஜிஎஸ்டி பெற்றது முறையற்ற வர்த்தகம் என்று முடிவு செய்து, அதனால் மனுதாரர் வாங்கிய ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி ஆக பெற்ற ரூ.1ஐ திரும்பி அளிக்கவும், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2,500ம் முறையீட்டாளருக்கு வழங்க மேற்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

Related posts

ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு

கம்பம் வேலப்பர் கோயில் வீதியில் ஓவர் டிராபிக் ஜாம்