இலக்கை கனவாக மாற்றுங்கள், கனவை நிஜமாக்குங்கள்!

வெற்றிபெறுவோம் என்ற எண்ணத்தை உங்கள் மனதின் அடி ஆழத்தில் விதைக்க ஒரு பழக்கத்தை கடைப்பிடியுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.உங்கள் இலக்கு, எதிர்காலக் கனவு பற்றி ஒரு தனி நோட்டில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.அதை ஆழ்ந்து படிக்க வேண்டும்.உங்கள் இலக்கு நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டதாகவே நினைத்து உங்களுக்குள்ளே நீங்களே உருவகப் படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் மற்றவர்களுடன் என்ன பேசுவீர்கள், எப்படி நடந்துகொள்வீர்கள் என்பதை ஒரு சினிமா படம் போல உங்கள் மனதில் ஓடவிடுங்கள். நீங்கள் எழுதி வைத்த இலக்கை, நீண்ட நாள் கனவை எப்போதாவது எடுத்துப் படிக்கக்கூடாது, ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். உங்கள் இலக்கை திரும்பத் திரும்பப் படிப்பதால் அவை உங்களது ஆழ்மனதில் ஆழமாக ஊன்றப்பட்டு, அந்த கனவு உங்களை தூங்கவிடாமல் செய்துவிடும்.உங்கள் இலக்கைக் கனவாக மாற்றிக் கொண்டு உங்களை நீங்களே ஊக்கப் படுத்திக்கொண்டு செயல்பட்டால் உங்கள் கனவை நிஜமாக்கலாம் என்பதற்கு இந்தப் பெண்மணி மிகச்சிறந்த உதாரணம்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் கடந்த ஆண்டின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்காக அவர் திறமையான மூன்று வீராங்கனைகளை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான டார்சி பிரவுன், இங்கிலாந்து பேட்ஸ்வுமனான ஆலிஸ் கேப்சி மற்றும் இந்திய வீராங்கனை யாஸ்திகா பாட்டியா ஆகியோரை வீழ்த்தி விருதைப் பெற்றுள்ளார் ரேணுகா. இதனுடன், ஐசிசி மகளிர் டி20 ஆண்டின் சிறந்த அணியிலும் ரேணுகா இடம்பிடித்துள்ளார். அவர் யார், அவர் செய்துள்ள சாதனைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.ரேணுகா சிங் தாக்கூர், இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள பர்சா என்ற கிராமத்தில் பிறந்தார். தனது மகளை கிரிக்கெட் வீராங்கனையாக ஆக்க வேண்டும் என்ற தந்தையின் இலக்கை நிறைவேற்றும் விதமாகவே ரேணுகா சிங்கிற்கு கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்தது.

ரேணுகா சிங்கின் தந்தை கேஹர்சிங் தாகூர் இமாச்சலப் பிரதேசத்தின் நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதாரத் துறையில்பணியாற்றினார்.அவர் மறைவிற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் தான் சாதித்து அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக அவரது உருவத்தை தனது கையில் டாட்டூவாக வரைந்து கொண்டார் ரேணுகா.ரேணுகாவின் தந்தை கேஹர் சிங் தீவிர கிரிக்கெட் ரசிகர். தனது மூத்த மகனுக்குக் கூட இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான வினோத் காம்ப்ளி நினைவாக அவருடைய பெயரை வைத்துள்ளார். தந்தையின் மறைவிற்கு பிறகு ரேணுகாவின் தாயார் சுனிதாவிற்கு அவரது வேலை கிடைத்தது. அதே நேரத்தில் தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக ரேணுகாவும், அவரது அண்ணனும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் ஒருவரது வருமானத்தை மட்டும் வைத்து கொண்டு இரண்டு பேருக்கும் கிரிக்கெட் பயிற்சிக்கான செலவை சரிகட்ட முடியாததால் ரேணுகாவின் சகோதரர் வினோத் கிரிக்கெட் பயிற்சியை கைவிட வேண்டியதானது. அவருக்கு பதிலாக ரேணுகா மட்டுமே பயிற்சியைத் தொடர்ந்தார்.2009 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் பெண்களுக்கான ரெசிடன்சியல் அகாடமியில் இணையும் வாய்ப்பு ரேணுகாவிற்கு கிடைத்தது. இதுதான் ரேணுகாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த அகடாமியில் பயிற்சியாளர்கள் பவன் சென், வீணா பாண்டே ஆகியோர் ரேணுகாவிற்கு சிறப்பான பயிற்சி அளித்தனர்.அதன்பிறகு 2016ல் கர்நாடகாவுக்கு எதிரான அண்டர் 19 போட்டியில் முதன்முதலாக களமிறங்கிய ரேணுகா சிங் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு BCCI மகளிர் ஒரு நாள் போட்டியில் 23 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்களை வீழ்த்திய முன்னணி வீராங்கனையாக சாதனை புரிந்தார்.

இத்தகைய சாதனை களால் ரேணுகா சிங் ரயில்வேயில் பணியாற்ற வாய்ப்பை பெற்றார். 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய டி20 போட்டி அவரது கிரிக்கெட் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு நாள் டிராபியில் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் ரேணுகா.பிப்ரவரி 2020ல் நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்தின் போது, ​​அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியின் கேப்டன்சியின் கீழ் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. ரேணுகா சிங் 2022ம் ஆண்டு ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வானார். 2022ம் ஆண்டில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில், ரேணுகா தாக்கூர் 29 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை (ஒருநாள் போட்டிகளில் 18 மற்றும் டி20 போட்டிகளில் 22) எடுத்து சாதித்து உள்ளார்.தந்தையின் இலக்கை தனது கனவாக மாற்றிக் கொண்டு மகளிர் கிரிக்கெட் போட்டிகளிலே பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி குறுகிய காலத்திலே ஐசிசியின் சிறந்த வீராங்கனை என்ற விருதினைப் பெற்று தனது கனவை நிஜமாக்கி சாதித்த ரேணுகா சிங்கின் வாழ்க்கை விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்க கூடிய பெண்களுக்குஊக்கப்படுத்தும் தன்னம்பிக்கைப் பாடமாகும்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு