கனவு இல்லத்துக்கு கைகொடுக்கும் இறைவன்

இப்போதெல்லாம் நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் இடைப்பட்ட நாட்களுக்குள்தான் பெண்ணும் பையனும் அதிகம் பேசிக் கொள்கிறார்கள். கைகோர்த்து மணல் வெளியில் நடக்கும்போது, ‘எப்போது வீடு கட்டுவோம்’ என்று மணல்வீடு கட்டும் குழந்தைகளை ஆசையாகப் பார்க்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு புதுமனை புகுவிழா என்பதுதான் இன்றைய மேரேஜ் டெக்னாலஜி. ‘‘புது வீடு கட்டிட்டுத்தான் சார் கல்யாணம்’’ என்று கட்டை பிரம்மச்சாரியாக நாற்பதை நெருங்கும் நண்பர்களும் இங்குண்டு. ‘‘தாத்தா… கல்யாணமாகி முதல்முறையா நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. ஆசீர்வாதம் பண்ணுங்க’’ என்று விருந்துக்குப் போகும் வீட்டில் எண்பது வயது பெரியவரை அழைத்து வருகிறார்கள். முதியவர் அப்போது ‘‘சீக்கிரமா சொந்த வீடு கட்டி, குழந்தையும் குடித்தனமுமா சௌக்கியமா இருக்கணும்’’ என்றுதான் ஆசீர்வதிப்பார். ‘‘பையனுக்கு சொந்த வீடு ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு. தைரியமா உங்க பொண்ண கொடுங்க’’ என்றுதான் கல்யாணத் தரகர்கள் பெண் வீட்டாரிடம் பேசுகிறார்கள். ‘‘வாயைக் கட்டறமோ… வயித்தைக் கட்டறமோ… ஒரு இடத்தை வாங்கிப் போட்டுடலாம். அப்போதான் நம்ம பசங்களாவது நிம்மதியா இருப்பாங்க’’ என்பதுதான் வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கழிக்கும் பெரும்பாலான தம்பதியரின் இன்றைய தாரக மந்திரம்.

மாதச் சம்பளத்தின் சரிபாதியை வீட்டுக் கடனுக்காக கட்டுபவர்கள்தான் இங்கு அதிகம். ‘‘கையில, கழுத்துல கிடந்ததையெல்லாம் அடமானம் வச்சோம். அங்கங்க இருந்ததையெல்லாம் தோண்டித் துருவியெடுத்தோம். கடன் வாங்கி அல்லோலப்பட்டோம். ஆனாலும் சொந்த வீடு கட்டி குடியேறும்போது ஏற்படற சுகமே தனிதான்’’ என்பதே இன்றைய நடுத்தரக் குடும்பங்களின் நயாகரா அனுபவம். ‘‘ரொம்பல்லாம் நான் ஒண்ணும் தேடலை. பேப்பர்ல ஒரு விளம்பரத்தையும் பார்த்ததில்லை. ஃபிரெண்ட் ஒருத்தர் ஃபர்ஸ்ட் ப்ளோர் வாங்கினாரு. எதிர்த்த மாதிரி இன்னொண்ணு இருக்குன்னாரு. அவரே லோனெல்லாம் அரேன்ஞ் பண்ணாரு. இப்படி… தானே நல்லா வீடா அமைஞ்சுடுச்சி’’ என்று யாராவது சொன்னால், அவருக்கு வீட்டு யோகம் அபரிமிதமாக இருக்கிறதென்று அர்த்தம். ‘‘நான் பார்க்காத புரோக்கரே இல்லை. படிக்காத பேப்பரும் இல்லை. புரோக்கருக்காக கொடுத்த காசை சேர்த்து வச்சிருந்தாலே இந்நேரம் ஒரு வீடு வாங்கியிருக்கலாம். நமக்கு சொந்த வீடு பிராப்தம் இல்லைன்னு நானும் ஒதுங்கிட்டேங்க’’ என்று புலம்புகிறவர்களும் உண்டு. ‘‘நானூத்தி அம்பது ஸ்கொயர் ஃபீட்ல வீடு. டபுள் பெட் ரூம் ஃப்ளாட். இருந்து என்ன புண்ணியம்? கையை தூக்கினா ஃபேன் பிளேடு வெட்டுது. சொந்த வீடுன்னு இருந்து என்ன பிரயோஜனம்’’ என்று சிலருக்கு வினோத வீட்டு யோகமும் அடிப்பதுண்டு.

மழை, வெயில் இவற்றிலிருந்து விடுபட வைப்பது வீடு. வெளியுலக துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிப்பது வீடு. ஒன்பது கிரகங்கள் அண்டவெளியை சுற்றினாலும் அவற்றின் கதிர்வீச்சை நாம் எதிர்கொள்வதென்பது வீட்டில் இருந்தபடிதான். அதனால்தான் அதையும் ஒரு கிரகமாக நினைத்து கிரகப் பிரவேசம் செய்கிறோம். வாழ்நாள் முழுவதும் வாடகை தந்தே காலம் கழிப்பவர் உண்டு; பிறந்ததிலிருந்து அரண்மனையில் வாழ்வோரும் உண்டு. கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தாலும், பல அடுக்கு வீடுகள் கட்டித் தந்தாலும், தனக்கென்று ஒரு வீடு அமையவில்லையே என்று தவிக்கும் பில்டர்ஸும் இங்குண்டு. பூமியையும், செங்கல்லையும் ஆளும் செவ்வாய் சரியில்லாதுதான் இதற்குக் காரணம். செவ்வாய்க்கு மட்டுமே வீட்டு மனை விஷயத்தில் பங்குண்டு என்று நினைக்காதீர்கள். அஸ்திவாரக் கல்லை ராகுவும், அதிலிருந்து எழுப்பப்படும் இரும்பு கம்பித் தூணை சனியும், மணலை சந்திரனும், சிமென்ட்டை சுக்கிரனும், தலைவாசலை குருவும், வீட்டின் தெய்வீகத்தை கேதுவும், வீட்டின் உள் பிரகாசத்தை சூரியனுமே நிர்ணயிக்கின்றனர். ‘‘எல்லாம் சரியான நேரத்துக்கு வருதுங்க. ஆனா, இந்த மணல் சப்ளை மட்டும் ஏன் லேட்டாகுதுன்னு தெரியலை. நான் எத்தனையோ வீடு கட்டியிருக்கேன். இப்படி லேட்டானதே இல்லை’’ என்று பில்டர் சொன்னால், ‘வீடு கட்டுவோரின் ஜாதகத்தில் சந்திரன் கொஞ்சம் தேய்ந்திருக்கிறார்’ என்று அர்த்தம். இதுபோல நவக்கிரகங்களும் சேர்ந்து வீட்டின் மீது ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எத்தனை ஹோமம் செய்தாலும் சரிதான்… நம் கிரகத்தில் நவக்கிரக ஹோமத்தை செய்யாமல் அந்தணர்கள் செல்வதில்லை. எல்லா கிரகங்களின் நேர்மறையான கதிர்வீச்சும் வீட்டிற்கு வேண்டும் என்கிற பிரார்த்தனைதான் அது. ஒருவருக்கு நல்ல வீடு அமைய வேண்டுமெனில் ஒன்பது கிரகங்களின் உறுதுணையும் அவசியமாகிறது.

தெருவில் பலவிதமான வீடு இருக்கலாம். உங்களுக்கு எந்தவிதமான வீடு அமையும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், மரங்கள் சூழ்ந்த சோலை மத்தியிலும், மருத்துவமனை பக்கத்திலும் என்று அவரவர் ராசியைப் பொறுத்தும் ஜாதகத்தைப் பொறுத்தும் வீடு அமையும். முகம், உடலமைப்பு, பேச்சு, நடையுடை பாவனை, படிப்பு, பட்டம் என்று சகலத்தையும் கிரகங்கள் நிச்சயிக்கின்றன. அவற்றின் தாக்கம் அறிந்தோ, அறியாமலோ இருக்கின்றன. அதுபோல கூரை வீடா, குச்சு வீடா, மச்சு வீடா, கான்க்ரீட் வீடா என்பதையும் கூட கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன. அப்படியானால் வீடு நன்றாக அமைவதற்கு எந்த கிரகம் நன்றாக இருக்க வேண்டும்? பொதுவாக கட்டிடகாரகனாக சுக்கிரனைச் சொல்லலாம். சுக்கிரன்தான் சுகபோகங்களுக்கு அதிபதி என்று ஜாதக அலங்காரம் சொல்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தோ, ஆட்சி பெற்றிருந்தாலோ, இந்திரலோகம் போன்ற வீடு அமையும் என சுக்கிரநாடி சொல்கிறது.

வீடு கட்டுவதற்கு முன்பு அடிப்படையாகப் பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம். அஷ்ட திக்குகள் என்கிற எட்டு திசைகளை மையமாக வைத்து பார்க்கப்படுவதுதான் வாஸ்து. ஒரு மனை உங்கள் பெயரில் இருக்கலாம். ஆனால், அதை ஆட்சி செய்வது எட்டு திசைகள்தான் என்பதை மறக்காதீர்கள். இந்த அடிப்படைக் கருத்தில் எழுந்ததுதான் வாஸ்து. இந்த எட்டு திசைகளில் ஈசான்யம் என்று சொல்லக்கூடிய வடகிழக்கு திசைதான் வீட்டின் உயிர் மூச்சாக விளங்குகிறது. வடகிழக்கிலிருந்து தவழ்ந்து வரும் காற்று அங்கு ஆரோக்கியத்தை முதலில் குடியமர்த்தும். தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைந்து கிழக்கு நோக்கி சமைத்தால் அன்னத்திற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அன்னபூரணி அங்கு எப்போதும் குடி கொள்வாள். வடமேற்கு திசையை வாயுமூலை என்பார். வருவோர் போவோரை வரவேற்று உட்காரவைத்து உபசரிக்கும் இடம் இது. தென்மேற்கு மூலை என்பது திறம்பட சம்பாதித்ததை தேக்கி வைக்கும் மூலை. இவ்வாறு இல்லத்திற்கும் திசைகளுக்கும் தொடர்புண்டு.

மனைவி, மக்கள், குடும்பம் போலவே வீடு அமைவதும் ஒரு பாக்கியம்தான். அந்த பாக்கியம் கிடைக்கவும் கோயில் உண்டு. அதை அருளும் தலமே திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயம் ஆகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேதான் இத்தலம் அமைந்துள்ளது. நாற்புறமும் அகழிக்குள் நீர் சூழ்ந்த அற்புதத் தலம். நாவுக்கரசர் ஐக்கியமான தலமும் இதுவேயாகும். கோயிற் பணிகளுக்காக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருளுதவி வேண்டி ஒவ்வொரு தலமாக நகர்ந்து கொண்டிருந்தார். இத்தலத்திற்கு வந்து ஓர் இரவு தங்கி ஒரு செங்கல்லை எடுத்து தலைக்கு வைத்துப் படுத்துறங்கினார். மறுநாள் காலையில் அந்த செங்கல் பொன்னாக மாறியது. அந்தப் பொன்னைச் செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார் ஈசன். இதனால் பல கோயிற் பணிகள் நிறைவேறின. இன்றும் பக்தர்கள் வீடு கட்டும் முன்பு செங்கல்லை இங்கு வைத்து பூஜித்து எடுத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. இங்கு இறைவன் அக்னீஸ்வரர் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். அக்னி செவ்வாய்க்கு உரியவன். வீடு, மனை, நிலம் போன்றவையும் செவ்வாயின் ஆதிக்கம் மிக்கவை. அதனால் இங்கிருக்கும் உற்சவ விக்ரகமான அக்னி பகவானையும் சேர்த்தே தரிசித்து வாருங்கள்.

நீங்கள் மேஷ ராசியா… அப்போது எந்தவிதமான வீடு அமையும்? அடுக்கு வீடா… தனிவீடா! பூர்வீகச் சொத்திலேயே அமையுமா, அல்லது வந்த ஊரில் வாங்குவீர்களா? இன்னும் ஒரு படி மேலே போய் தாய்நாடா அன்னிய தேசமா என்பது வரை உங்கள் ஜாதகம் கண்ணாடி போலக் காட்டும். எந்தெந்த ராசிக்கு எப்படிப்பட்ட வீடு அமையும் என்று இனி பார்ப்போம். வீடு கட்டுவதற்கு எது தடையாக உள்ளது என்பதை ஆராய்வோம். ‘‘எனக்கு ஏழரை சனி… இப்போ வீடு வாங்கலாமா?’’ என்று கேட்பின் அதற்கும் பதிலுண்டு. இல்லக் கனவிற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் அலசுவோம் வாருங்கள்.

 

Related posts

மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்