இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக ட்ரீம் லெவன் நிறுவனம்: பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்

மும்பை: இந்திய அணியின் ஸ்பான்சராக இருந்த பைஜூஸ் நிறுவனம் விலகிய நிலையில், தற்போது புதிய ஸ்பான்சராக ட்ரீம் லெவன் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, இந்திய அணிக்கான மெயின் ஸ்பான்சருக்கான டெண்டரை வெளியிட்டது. முன்னதாக சீன செல்போன் நிறுவனங்களான ஓப்போ, வீவோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்தன. அதன்பின்னர் ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களை நடத்தியதன் மூலம் பிசிசிஐ ரூ.5.5 கோடி வரை வருமானம் ஈட்டி வந்தது. அதேபோல் ஐசிசி தொடர்களில் அந்த வருமானம் ரூ.1.7 கோடியாக குறைந்தது. ஏனென்றால் ஐசிசி தொடர்களுக்கு ஸ்பான்சர்களின் லோகோ இடம்பெறுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதற்கிடையில் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நவம்பர் வரை இருந்த நிலையில், நிதி இழப்பு காரணமாக மார்ச் மாதத்துடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது.

இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கூட புதிய ஜெர்சியுடன் ஸ்பான்சர் லோகோ இல்லாமலேயே களமிறங்கியது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் ஸ்பான்சர் யார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதன் பின்னர் இந்திய ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனை ஃபேண்டஸி கேமிப் செயலி நிறுவனமான ட்ரீம் லெவன் 2027ஆம் ஆண்டு வரை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பைஜூஸ் நிறுவனம் அளவிற்கு ட்ரீம் லெவன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும், பிசிசிஐயின் வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ட்ரீம் லெவன் நிறுவனமே டைட்டில் ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆகஸ்ட் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு