தெம்பு தந்த ட்ராகன் ஃப்ரூட்…

திட்டமிட்டு வெற்றி கண்ட ஐடி ஊழியர்!

வெவ்வேறு பணிகளில் இருப்பவர்களும் விவசாயத்தை விரும்பி மேற்கொள்ளும் காலமாக இந்தக் காலம் இருக்கிறது. அதிலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊரில் விவசாயம் பார்க்க அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் சிலர் வந்த வேகத்தில் விவசாயத்தில் சோபிக்க முடியாமல் திரும்பிவிடுகிறார்கள். ஒருசிலர்தான் தங்கள் பணியையும் விடாமல், விவசாயத்திலும் ஜெயித்துக் காட்டுகிறார்கள். அத்தகைய நம்பிக்கை மனிதர்களில் ஒருவர்தான் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பரமேஸ்வரபுரத்தைச் சேர்ந்த சுமிதா. பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் இவர், தங்கள் பகுதியில் முதன்முறையாக ட்ராகன் பழ சாகுபடியில் இறங்கி வெற்றி
கண்டிருக்கிறார். ஒரு காலை வேளையில் காற்றாலைகள் சூழ்ந்த சுமிதாவின் டிராகன் தோட்டத்திற்குச் சென்றோம். ட்ராகன் பழ அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த சுமிதா நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

‘‘மதுரைதான் எனக்கு பூர்வீகம். பி.டெக்., எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளர் பணி. எனது கணவர் வினோத் குமார சாமியும் பெங்களூரில் ஐடி கம்பெனியில் மேலாளர். எங்களுக்கு தேவ் என்ற மகன் இருக்கிறான். கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் என அறிவித்தன. அதிலும் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் இதை முழுமையாக செயல்படுத்தின. எங்களுக்கும் அப்படித்தான். பெங்களூரில் அப்போது அதிகளவில் கொரோனா பாதிப்பு இருந்ததால் நாங்கள் எனது கணவரின் சொந்த ஊரான ராதாபுரம், பரமேஸ்வரபுரத்திற்கு வந்துவிட்டோம். எனது மாமனார் அடிப்படையில் ஒரு விவசாயி. எனக்கும் சிறு வயதில் இருந்தே விவசாயம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. அதை வீட்டில் இருந்து வேலை பார்க்கும் இந்தக் காலகட்டத்தில் செயல்படுத்தலாமே என்ற எண்ணம் வந்தது.

ராதாபுரம் பகுதியில் விவசாயம் செய்யும் அளவிற்கு போதிய அளவு தண்ணீர் வசதி இல்லை. அதையும் சமாளித்து விவசாயம் செய்தால் உரிய லாபமும் கிடைப்பதில்லை என்பதே இந்தப் பகுதி விவசாயிகளின் பொதுவான கருத்து. ஆனால் எந்தத் தொழிலாக இருந்தாலும், அதை முறையாக ஆராய்ந்து, சாதக பாதகங்களைக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு செயல்பட்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்பது எனது பாலிசி. அதன்படி விவசாயத்தில் ஈடுபடலாம் என முடிவெடுத்து விட்டேன். உடனே இந்தப்பகுதியில் நிலம் வாங்கினோம். தரிசாகக் கிடந்த இந்த நிலத்தைத் திருத்தி சாகுபடிக்கு ஏற்றவாறு மாற்றினேன்.

ராதாபுரத்தின் மண் அமைப்பு, சீதோஷ்ண நிலை உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு என்ன சாகுபடி செய்யலாம்? என யோசித்தபோது ட்ராகன் ஃப்ரூட் செய்யலாமே என தோன்றியது. இந்தச் செடி 77 டிகிரியில் இருந்து 112 டிகிரி வரை உள்ள வெப்ப நிலையில் நன்றாக வளரும். நல்ல வெளிச்சமும், வெப்பமும் இதற்குத் தேவை. அதே நேரத்தில் உயர் வெப்ப நிலையைத் தாங்காது. இதனால் ராதாபுரம் பகுதியில் ட்ராகன் ஃப்ரூட் நன்றாக வரும் என உறுதியாக நம்பினேன். அந்த நம்பிக்கையில் ட்ராகன் ஃப்ரூட்டைப் பயிரிட்டு இருக்கிறேன். செடிகளைத் தாங்கியிருக்கும் தூண்களுக்கு வெள்ளை நிற பெயின்ட் அடித்திருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். வெள்ளை நிறம் வெப்பத்தை உள்வாங்காது. அதன் மூலம் செடிகள் தூண்களின் உயர் வெப்ப தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படும். இதற்காகத்தான் வெள்ளை பெயின்டிங். இங்குள்ள ஆடி மாதக் காற்றுதான் செடிகளுக்கு ஆபத்தாக இருக்கிறது. அதைத் தடுக்க கரைகளில் மூங்கில் மரங்களை நட்டு வைத்திருக்கிறேன். மூங்கில் மரம் வளர்ந்து விட்டால் காற்றைத் தடுத்து அரணாக நிற்கும். இந்த மூங்கில்களை புத்தர் கோயில்களில் பெரிய அளவிலான ஊதுபத்தி செய்ய பயன்படுத்துகிறார்கள். இதை அந்தப் பயன்பாட்டிற்கும் வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து திட்டமிட்டு விவசாயம் செய்கிறேன்.

தமிழ்நாட்டில் பலர் ட்ராகன் ஃப்ரூட் பயிரிடுகிறார்கள். அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாகர் ட்ராகன் ஃப்ரூட்டை வெற்றிகரமாக சாகுபடி செய்கிறார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவரிடம் இருந்துதான் செடிகளையும் வாங்கி வந்து ஒரு ஏக்கரில் நடவு செய்தேன். ட்ராகன் ஃப்ரூட் செடிக்கு தூண் மிகவும் அவசியம். ஒரு தூண் அமைக்க ரூ.650 செலவானது. ஏன் இவ்வளவு செலவு என நீங்கள் யோசிக்கலாம். அருகில் மற்றொரு விவசாயியும் ட்ராகன் ஃப்ரூட் பயிரிடுகிறார். அவர் தூணின் செலவைக் குறைக்க T வடிவில் அமைத்திருக்கிறார். இது என்னவாகும் என்றால், ஆண்டுகள் செல்லச் செல்ல ட்ராகன் ஃப்ரூட் செடியின் கிளைகள் அதிகமாகும். அதன் எடை தாங்காமல் செடி கீழே விழுந்தால் விழுந்ததுதான். அதை எடுக்க முடியாது. இப்படித்தான் பலர் தவறு செய்கிறார்கள். ட்ராகன் செடி 25 ஆண்டுகள் வரை நமக்கு பலன் தரும். இவ்வளவு நீண்ட ஆண்டுகள் ஆயுள் கொண்ட இந்தச் செடிக்கு தூண் அமைப்பதில் மிகுந்த கவனம் தேவை. தூண் அமைப்பது, செடிகள் வாங்குவது, சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது என மொத்தம் ரூ.5 லட்சம் வரை எனக்கு செலவானது. இதில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் கிடைத்தது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் தூண் அமைப்பதில்தான் அதிக செலவு.

தூண்கள் 400 ரூபாய்க்குக் கூட கிடைக்கிறது. ஆனால் 25 வருடம் வரை பயன்படுத்தப்பட உள்ளதால் ட்ராகன் ஃப்ரூட் செடிகளுக்கு ஏற்ற வகையில் டெல்லியில் இருந்து மோல்டு செய்து ‘ரிங்’ வடிவிலான தூண்களை அமைத்து எடுத்து வந்தேன். சொட்டு நீர்ப் பாசனத்தில் 4 செடிகளுக்கும் செல்லும் வகையில் அதை மறுவடிவமைப்பு செய்தேன். ஒரு தூணுக்கு நான்கு செடிகள் வீதம் 2000 செடிகளை ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்திருக்கிறேன். நிலத்தை நன்றாக உழவு செய்து அரை அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பார் அமைத்து அதில் தூண்களை நட்டோம். தூண்களை வரிசைக்கு வரிசை 10 அடி எனவும், தூணுக்குத் தூண் 8 அடி எனவும் இடைவெளி விட்டு நட்டிருக்கிறோம். அந்தத் தூண்களின் 4 மூலைகளிலும் 4 செடி என நடவு செய்தோம். டிராகன் செடிகளின் வேர் வாழை நார்களைப்போல் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாத்தி அமைத்து நட வேண்டியது அவசியம். கீழே நட்டால் மழைக்காலங்களில் வேர் பிடுங்கிக்கொண்டு, செடிகள் சேதமாக வாய்ப்பு ஏற்படும். நடவு செய்யும்போது 3 அங்குலம் அளவுக்கு கையால் சிறிய குழியெடுத்து நடவு செய்யலாம். இதில் களையில்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். களைச்செடிகள் வளர்ந்துவிட்டால், அவற்றை அழிப்பது சிரமமாகி விடும். களைச்செடிகளின் வேர் ட்ராகன் செடிகளின் வேருடன் இணைந்துவிடும். அப்போது களைகளை அகற்றினால் ட்ராகன் செடிகள் சேதமாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் களையெடுத்து ஆட்டு உரம், மாட்டு உரம் ஆகியவற்றோடு நீம் பவுடரைக் கலந்து செடிகளைச் சுற்றி வைப்போம்.

பூக்கும் சமயங்களில் குஜராத்தில் இருந்து கடல்பாசி உரத்தை வாங்கி வந்து செடிகளுக்கு போடுவோம். ட்ராகன் பூவுக்கு எறும்பு வரும். அவற்றைக் கட்டுப்படுத்த நீம் ஆயில் ஸ்பிரே செய்வோம். இதில் ஒருவிதமான பூஞ்சாணத் தாக்குதல் வரும். சித்திரையில் வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும்போது இந்தத் தாக்குதல் வர வாய்ப்பு இருக்கும். அப்போது செடிகள் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். அந்த சமயத்தில் ரெடோமில் என்ற மருத்தை சொட்டுநீரில் கலந்து கொடுப்போம். சில சமயங்களில் செடிகளுக்கு சாம்பல் தெளிப்போம். மீன் அமிலம் தயாரித்து பழம் பழுக்கும் சமயத்தில் 15 நாளுக்கு ஒருமுறை செடிகளில் தெளிப்போம். 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று இந்த சாகுபடியைத் தொடங்கினேன். ஆகஸ்டு 6ம் தேதி முதல் ட்ராகன் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பித்தேன். பழங்கள் அத்தனையும் ரொம்ப ருசி. ட்ராகன் பழம் வியட்நாமில்தான் அதிக டேஸ்ட்டில் இருக்கும் என்பார்கள். அத்தகைய வியட்நாம் பழங்களை விட தமிழக நிலத்தில் விளைந்த இந்த டிராகன் பழத்திற்கு சுவை அதிகம் என அப்போது தெரிந்துகொண்டேன். அந்த சீசனில் 1 டன் ட்ராகன் பழங்களைப் பறித்து விற்பனை செய்தேன்.

அதன் மூலம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ட்ராகனுக்கான சீசன் இருக்கும். அதில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் அதிகபட்சமாக மகசூல் கிடைக்கும். கடந்த ஒரு வாரத்தில் 170 கிலோ பழங்களைப் பறித்து விற்பனை செய்தேன். இந்த சீசனில் குறைந்தது 4 டன் ட்ராகன் பழங்கள் மகசூலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த சாகுபடியில் ஆண்டுகள் செல்லச் செல்ல மகசூல் அதிகரிக்கும். ட்ராகன் பழங்களுக்கான மொத்த மார்க்கெட் பெங்களூர், கேரளா மற்றும் சென்னையில் இருக்கிறது. இங்கு பழத்தை 3 கிரேடுகளாக பிரிக்கிறார்கள். அதாவது 400 கிராமுக்கு மேல் ஒரு பழத்தின் எடை இருந்தால் அது கிரேடு ஏ. 300 கிராமில் இருந்து 400 கிராமுக்குள் இருக்கும் பழங்கள் கிரேட் பி. 300 கிராமிற்கு கீழ் உள்ள பழங்கள் கிரேடு சி. இதன் அடிப்படையில் 10 கிலோ பெட்டியில் அடைத்துக் கொடுப்போம். பெட்டியில் கிரேடுகளை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதை அன்றைய மார்க்கெட் நிலவரப்படி வியாபாரிகள் எடுத்துக்கொண்டு அதற்கான தொகையை நமக்குக் கொடுப்பார்கள்.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி கிரேடு ஏ பழங்களை ஒரு கிலோ ரூ.120க்கு மொத்த வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். சீசன் நேரத்தில் 10 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.1500 வரை விற்பனையாகும். இந்த மே மாதம் வரை வியட்நாம் பழங்கள் நம் நாட்டில் இறக்குமதியாகும். அதன்பிறகு வியட்நாம் பழங்கள் வராது. அவர்களுக்கு அதோடு சீசன் முடிந்துவிடும். மே மாதத்திற்குப் பிறகு ட்ராகன் ஃப்ரூட் வரத்து குறைந்துவிடும். அப்போது நாம் விளைவித்துக் கொடுக்கும் ட்ராகன் பழங்களின் விலை எகிறும். ட்ராகன் ஃப்ரூட் விவசாயத்தைப் பொறுத்தவரை போட்ட முதலீட்டை முதல் ஒன்றரை ஆண்டுகளில் எளிதாக எடுத்துவிடலாம். இதற்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது. எனது மாமனார் தினசரி சொட்டுநீரில் தண்ணீர் பாய்ச்சுவார். நான் வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது 3 நாட்கள் பெங்களூரில் இருந்து இங்கு வந்து விவசாயம் பார்ப்பேன். ராதாபுரம், வள்ளியூர் போன்ற வறட்சியான பகுதிகள் ட்ராகன் ஃப்ரூட் பயிரிட ஏற்ற இடமாக இருக்கின்றன. ராதாபுரம் பகுதியில், பராமரிப்பு குறைவு என்ற காரணத்தால் தென்னையை அதிகமாக பயிரிடுகிறார்கள். அத்தகைய எண்ணம் கொண்ட விவசாயிகள் தாராளமாக ட்ராகன் பழச் சாகுபடியை முயன்று பார்க்கலாம்’’ என மற்ற விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார் இந்த ஐடி விவசாயி.
தொடர்புக்கு:
சுமிதா – 097318 60567, 097398 39619.

நேரடி விற்பனை

விவசாயத்தைப் பொறுத்தவரை இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் பார்க்கிறார்கள். இதை உணர்ந்த சுமிதா, தான் விளைவிக்கும் ட்ராகன் பழங்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுவருகிறார். பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ட்ராகன் பழங்களுக்கு நல்ல கிராக்கி. இதனால் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு களில் இதை நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். தற்போது சொந்தமாகவே பிராண்டிங் செய்து விற்பதற்கான ஏற்பாட்டிலும் தீவிரமாகி இருக்கிறார்.

ஆடு வந்தால் அழிவு

ட்ராகன் தோட்டத்தில் ஆடு, மாடுகள் நுழையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என்கிறார் சுமித்ரா. இதுகுறித்து அவர் கூறுகையில், “ ட்ராகன் பழச்செடிகள் நல்ல இனிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனால் இதை ஆடு, மாடுகள் விரும்பி சாப்பிடும். ஒருமுறை தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் செடிகள் அனைத்தையும் கடித்துச் சாப்பிட்டு காலி செய்துவிடும். இதனால் அவை எக்காரணம் கொண்டும் தோட்டத்திற்குள் நுழையாத அளவுக்கு தடுப்பு ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்கிறார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது