நெருங்கி வரும் ஓணம் பண்டிகை; தோவாளையில் பூ விலை 3 மடங்கு உயர்வு: மல்லி ரூ2400, பிச்சி ரூ1750க்கு விற்பனை


ஆரல்வாய்மொழி: ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை இன்று 3 மடங்கு உயர்ந்துள்ளது. இன்று மல்லிகை கிலோ ரூ.2400, பிச்சி ரூ.1750க்கும் விற்பனையானது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் பிரபலமானது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை, குமாரபுரம் என்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் பூக்கள் இங்கு கொண்டு வரப்படுகிறது.

அதன்படி தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனையாகிறது. அதிலும் பண்டிகை காலம் வந்துவிட்டால், பூக்களின் விலை கடுமையாக உயரும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த வகையில் நாளை மறுநாள் (15ம் தேதி) ஓணம் பண்டிகை என்பதால் இப்போதே தோவாளையில் பூக்கள் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. அத்தப் பூ கோலமிடுவது, பூக்களால் அலங்கரித்து ஓண ஊஞ்சல் ஆடுவது, பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உள்ளூர் வியாபாரிகள் முதல் கேரள வியாபாரிகள் வரை தினமும் பூக்களை அள்ளி செல்கின்றனர்.

விற்பனை ஒருபக்கம் அதிகரித்தாலும் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் ஓணம் பண்டிகை நெருங்கி வருவதாலும், இன்று ஆவணி மாத கடைசி வெள்ளி என்பதாலும் இன்று காலை முதலே தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்கி செல்வதற்காக வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வரத்தொடங்கினர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பூக்களை வாங்கி சென்றனர். இதனால் தோவாளை சந்தையில் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு ரூ.2400, பிச்சி ரூ.1750, கொழுந்து ரூ.140, மரிக்கொழுந்து ரூ.140, மஞ்சள் கேந்தி ரூ.55, ஆரஞ்சு கேந்தி ரூ.60,

வெள்ளை செவ்வந்தி ரூ.190, மஞ்சள் செவ்வந்தி ரூ.170, வாடமல்லி ரூ.200, கோழிக்கொண்டைப்பூ ரூ.60, தாமரை ரூ.10 என விற்பனையாகியது. நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.900 மற்றும் பிச்சி ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று பூக்களின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாளை பூக்களின் விலை மேலும் உச்சத்தை தொடும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சாதாரண நாட்களில் தோவாளையில் இருந்து கேரளாவுக்கு தினமும் 50 டன் பூக்கள் அனுப்பப்படும். ஆனால் ஓணம் பண்டிகை காலம் என்பதால் இன்று 200 டன் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.

Related posts

விருதுநகர் பட்டாசு விபத்து: முதலமைச்சர் நிதியுதவி

அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்