இரட்டை இலை முடக்கப்படுகிறதா? ஒத்த சீட்டு ஓபிஎஸ் சுயேச்சையில் போட்டியிடும் பரபரப்பு பின்னணி: தேனி பார்முலாவை கையிலெடுக்க திட்டம்

அரசியல் வானில் சிறகடித்து பறப்போமா என்ற சந்தேகம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிருக்கு ஏற்பட்டு போச்சாம். அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் எந்தபக்கமும் போகமுடியாத வகையில் எல்லா பக்கமும் கேட் போட்டு மூடிட்டாங்களாம். ஆனால் விடாப்பிடியாக இரட்டை இலை சின்னத்தில்தான் நான் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக சொல்லி வந்தார்.

பாஜவின் உதவியுடன் இலை சின்னத்தை பெற்றுவிடலாம், அவர்களும் நமக்கு உற்றதுணையாக இருப்பார்கள் என்று மனதார நம்பினார். இதன்காரணமாக முதன்முதலாக ஓடிச்சென்று பாஜவுக்கு ஆதரவு கொடுத்தார். அங்கும் அவருக்கு அவமானம்தான் மிஞ்சிப்போனதாம். சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற முறையில் முன்வரிசையில் எடப்பாடி பழனிசாமியுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ஆனால் அவரது இருக்கைக்கு மாஜி மந்திரி உதயகுமாரை மாற்றியதால், பன்னீர்செல்வத்தின் இருக்கை பின் வரிசைக்கு மாற்றப்பட்டது.

இரண்டுமுறை முதல்வராக இருந்த தனது இருக்கை கைவிட்டு போனதில் ரொம்பவே அதிர்ச்சியில தான் இருக்காரு. இதனால் சட்டசபை செல்வதையும் நிறுத்திவிட்டார். இப்படியாக செல்லும் பாதையெல்லாம் முள் பாதையாக இருக்கேன்னு மனசொடிஞ்சி இருக்காரு. அதேநேரத்தில் ‘‘நேற்றுபெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்’’ என்பது போல, ரெய்டுக்கு பயந்துபோய் பாஜவுடன் ஒட்டிக்கொண்டவர்களுக்கெல்லாம் சீட் ஒதுக்கிய நிலையில், தங்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கவில்லை.

இதனால் என்னசெய்வது என்றே தெரியாமல் கடும் தவிப்புக்கு ஆளான நிலையில், எல்லா பிரச்னையையும் மாவட்ட செயலாளர்களின் தலையில் ஏற்றிவிடவேண்டும் என திட்டமிட்ட ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை கூட்டினார். எல்லோரிடமும் பாஜ கூட்டணியில 1 சீட்டு தான் தருவதாக கூறுகிறார்கள் என்ன செய்யலாம் என கூறியதுடன், அந்த சீட்டை அவர்களிடமே கொடுத்துவிட்டு, ஆதரவு தெரிவிக்கலாமா? அல்லது சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாமா? என கேட்டார்.

ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், நமக்கு ஒதுக்கும் ஒரு சீட்டில் நீங்கள்தான் நிற்கவேண்டும் என ஒரே குரலாக கூறினர். நமக்கு ஒதுக்கப்படும் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நீங்கள் வெற்றிபெற்று, ஒன்றிய மந்திரியாக ஆக வேண்டும் அதற்காக எங்களது உழைப்பை தருவோம் எனவும் கோரசாக கூறினார்கள். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் இசைவு தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிட்ட டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது.

இதில் அவர் வெற்றியும் பெற்றதால் அந்த சின்னத்தையே கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை. இதேபோல் தமாகா கட்சி தொடங்கிய பின் சந்தித்த அனைத்து தேர்தலிகளிலும் தனது தந்தையின் சின்னமான சைக்கிள் சின்னத்தை ஜி.கே.வாசன் கேட்டார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால் இம்முறை டிடிவி.தினகரன் மற்றும் ஜி.கே.வாசன் பாஜவுடன் கூட்டணி வைத்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் அவர்கள் கேட்ட குக்கர் மற்றும் சைக்கிள் சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அந்த கட்சிக்கான சின்னம் கிடைத்துவிடும். அப்படி இல்லையென்றால் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஒவ்வொரு தேர்தலுக்கு மாறும். கடந்த தேர்தலில் பெற்ற சின்னம் வேண்டுமென்றால் அந்த சின்னத்துக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வழங்கும்.

பாஜ ஆதரவுடன் கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னத்தை பெற்றதுபோல் இரட்டை இலையும் கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டார் ஓபிஎஸ். நம்ம ஒரு கணக்கும் போட நமக்கு மேல இருக்கவன் ஒரு கணக்கு போடுவான் என்று சொல்வதுபோல் பாஜ வேறொரு கணக்கு போட்டது. அதுதான் தாமரை சின்னத்தில் ஓபிஎஸ்சை போட்டியிட வைப்பது. இதை கேட்டுதான் திடுக்கிட்டு போய்விட்டாரு ஓபிஎஸ்.

குட்டி குட்டி கட்சி வைத்திருபவர்களுக்கு எல்லாம் சின்னத்தை கொடுத்துவிட்டு முன்னாள் முதல்வரான தன்னை இப்படி அசிங்கப்படுவதா என்று ஓபிஎஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இரட்டை இலைக்காக சட்டப்போராட்டம் தொடர்கிறது என்று கூறிவிட்டு, தாமரை சின்னத்தில் போட்டியிடுவதா என்று கூட இருக்கிறவர்களே கேட்டார். மேலும் இந்த முறை பாஜ சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுகவுக்காக உரிமை கோர முடியாத சூழல் வரும். தொண்டர்கள் நம் பின்னால் இருக்க மாட்டார்கள் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தாமரை சின்னத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் முக்கிய கட்சிகளின் சின்னத்தை பாஜ முடக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே நாம் தமிழருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒருவருக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது. இதேபோல், இரட்டை இலையை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கேட்டு வருவதால் சின்னத்தை முடக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் முன்வந்து உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் காட்டிய பார்முலா வித்தையை ராமநாதபுரத்திலும் காட்டி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளதாகவும், இதற்காக ‘‘நூறு சி’யை களம் இறக்கவும் முடிவு செஞ்சிருக்காராம். மேலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவும் முடிவு ஆகியிருக்காம். ஆனால் வீம்புக்காக பசையை களத்தில் இறக்கி, உள்ளதும் போச்சுடா என்ற கதையாகி விடக்கூடாதே என்ற எண்ணமும் அவருக்கு இருக்காம். ஓபிஎஸ் கனவு பலிக்குமா? இல்லையா? என்று ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

* விஸ்வரூபம் எடுப்பேன்: ஓபிஎஸ் திடீர் வாய்ஸ்
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கட்சி மற்றும் மக்கள் நலன் கருதி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை பாஜவிற்கு எதிராக உள்ளது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதி, மன்னர் சேதுபதி ஆண்ட நீதியான ஆட்சி நடந்த பூமி.

அங்குள்ள மக்கள் நீதியின் படியும், தர்மத்தின் படியும் செயல்படுவார்கள். நீதிக்கு நல்ல தீர்ப்பு வழங்கக் கூடிய மக்கள் ராமநாதபுரம் மக்கள். ஆகையால் தான் ராமநாதபுரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். அநீதிக்கும், நீதிக்கும் புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன்’’ என்றார்.

‘அதிமுகவை மீட்கும் போராட்டம் தொடருமா?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘‘சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்றைக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து நாங்கள் தான் வெற்றி பெறுவோம். உறுதியாக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இறுதியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

* மானம் கெட்டும் மனம் தளராத ஓபிஎஸ் பாஜ கூட்டணியில் சேர்வதற்காக மனுப் போட்டுக் கொண்டே இருந்தார். தனக்கும், மகனுக்கும் மற்றும் ஆதரவாளர்கள் 2 பேருக்கும் என 4 சீட்டு ஒதுக்கும்படி பணிவோடு பாஜவை கேட்டுக் கொண்டார். இருக்கிறதே மொத்தம் 4 பேரு, இதுல உனக்கு 4 சீட்டு ஒரு கேடா என அண்ணாமலை மனதில் நினைத்துக் கொண்டார். அதெல்லாம் முடியாது. ஒரு சீட்டுதான்.

இஷ்டம் இருந்தா வா. இல்லேன்னா போ என்று சொல்லி விட்டார். நொந்து நூடுல்சான பன்னீர்செல்வம், பேசிவிட்டு சொல்கிறேன் என்று வந்து விட்டார். ஒரு சீட்டை மகனுக்கு கொடுத்தா, கூட இருக்கிற மத்தவங்க கோச்சுப்பாங்க… நெருங்கிய ஆதரவாளர்கள்ல யாருக்காவது ஒருத்தருக்கு கொடுத்தா.. மத்தவங்க ஓடிடுவாங்க.. சரி எப்படியும் தோக்கறது உறுதி. நானே போட்டியிடுறேன்..

மத்தவங்களையும் சமாளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் ஓபிஎஸ். அதே நேரத்தில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்கும் கடும் எதிர்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு போட்டியிட்டு ஏற்கனவே எம்பியாக இருந்த டிடிவி.தினகரனுக்கு ஒதுக்க பாஜ முடிவு செய்தது. அவரும் தேனி கொடுத்தால் வருகிறேன். இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேனி தொகுதி கைவிட்டு போய் ராமநாதபுரம் தொகுதி ஓபிஎஸ் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

* மகனுக்கு சீட் கிடைக்காதது ஏன்? ‘பாஜ எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை’
ஓ.பி.எஸ், ஆதரவாளர்கள் கூறுகையில், ‘பாஜ எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்றாலும் இரட்டை இலை கிடைப்பதற்கு ஏதாவது உதவி செய்வார்கள் என்று நம்பினோம். ஆனால் அதற்கும் தற்போது வாய்ப்பு இல்லை. இலைக்காக போராடி வரும் ஒரு முன்னாள் முதல்வரை தாமரை சின்னத்தில் போட்டியிட கேட்டு அவமானப்படுத்தி விட்டனர். என்றாலும் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி வெற்றிபெறுவதுடன் ஒன்றிய அமைச்சராவோம்’ என்றனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!