இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி ரூ. 22 கோடி வசூல் செய்தவர் பிரான்ஸ் தப்பி ஓட்டம்: நிதி நிறுவன அதிபருக்கு போலீஸ் வலை

நாகப்பட்டினம்: நிதிநிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.22 கோடி மோசடி செய்து விட்டு பிரான்ஸ் தப்பி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கிய பகுதியில் ரியல் டிரீம்ஸ் அக்ரோ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை புதுச்சேரியை சேர்ந்த முகமதுஅலி என்பவர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் காரைக்கால் மார்க்கெட் வீதியில் இயங்கி வந்தது. இதன் ஒரு கிளை நாகப்பட்டினத்தில் இயங்கியது.

இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக நாகூர் கோவிந்தராஜ், நாகப்பட்டினம் ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்கால் பழனிவேல், ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பிரபாகரன் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் ரூ.500, ரூ.1000 என செலுத்தினால் 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளனர். அந்த வகையில் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் 13 பேரிடம் ரூ.8 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 270 ஐ ஆறுமுகமும், தமிழ்வாணனும் வசூல் செய்தனர்.

கடந்த 2012 முதல் 2017 வரை முதலீடு செய்த பணத்திற்கு முதிர்வு காலம் முடிந்த பின் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். மேலும் நிதி நிறுவன தலைவர் முகமதுஅலி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் விரைவில் பணம் கிடைத்து விடும் என கூறி வந்தனர். இதன் பின் 2020ல் கொரோனா தொற்று காரணமாக நிதிநிறுவன தலைவர் பணத்தை கொண்டு வர இயலவில்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி புகாரின்படி நாகப்பட்டினம் வெளிப்பாளையம் போலீசார், பிரான்சில் உள்ள நிறுவன தலைவர் முகமது அலி மற்றும் கோவிந்தராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரான்சில் உள்ள முகமதுஅலியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு