Thursday, September 19, 2024
Home » சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன்-குங்குமம் ‘தோழி’யின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன்-குங்குமம் ‘தோழி’யின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா

by Neethimaan
Published: Last Updated on

* அமைச்சர் கீதாஜீவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்
* 100 அரங்குகளுடன் காண்போரை கவரும் ஷாப்பிங் சென்டர்கள்
* ஆர்வமுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்வையிட்டனர்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன், ‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்டமான 3 நாள் ஷாப்பிங் திருவிழாவை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னீச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், மருத்துவம், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் என அனைத்து பெண்கள் சார்ந்த பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் தினகரன் நாளிதழ், ‘குங்குமம் – தோழி’ இதழ் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் ஷாப்பிங் திருவிழாவை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று காலை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ், கனரா வங்கி பொதுமேலாளர் கே.ஏ.சிந்து, லைப்லைன் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நடேஷ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சத்யபன் பெஹேரா, பதஞ்சலி துணைத்தலைவர் பி.வி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: பெண்களுக்கு பிரத்யேகமான முன்னேற்றம், ஆரோக்கியம், தொழில் போன்ற அனைத்து விதமான தகவல்களுடன் தோழி புத்தகம் வெளியாகிறது. அதன்படி, பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் தினகரன், குங்குமம் – தோழி புத்தகம் சார்பில் மூன்று நாள் கண்காட்சியை தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த கண்காட்சியில் பிரதானமான ஒன்றாக நிறைய பெண் தொழில்முனைவோர்கள் இங்கு கடைகளை அமைத்திருக்கின்றனர். இது பல பெண்களுக்கு உபயோகமாக இருக்கும். கலைஞரின் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்தவகையில், இந்த கண்காட்சி பெண்களுக்கு பயன் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்,இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் பேசியதாவது: தோழி இதழில் அரிய வகை தகவல்கள், தொழில், ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வெளியாகிறது. இங்கு பல பெண் தொழில் முனைவோர்கள் உள்ளனர்.

அவர்கள் உழைப்புக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். பெண்களுக்கான பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். பெண் சமுதாயம் முன்னேறினால், தமிழ் சமுதாயம் முன்னேறும் என்ற முன்னெடுப்போடு முதல்வர் சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஷாப்பிங் திருவிழா இன்று மற்றும் நாளை காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. தொடக்க நாளான நேற்றைய தினம் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைர நகைகள் வாங்கினால் 40 சதவீதம் ஸ்பெஷல் தள்ளுபடி: வொண்டர் டைமண்ட்ஸ் தகவல்
தோழி கண்காட்சியில் ைவர நகைகள் வாங்கினால் 40 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்குவதாக வொண்டர் டைமண்ட்ஸ் மேலாளர் விக்டர் டிஷோசா தெரிவித்தார். வைரம் என்றால் பணக்காரர்கள் மட்டுமே வாங்குவது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அனைத்து தரப்பு மக்களையும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. குறைந்த விலையில் தரமான வைர நகைகளை மக்களுக்கு கொடுக்கிறோம். எங்களது வைர நகைக் கிளைகள் தென்னிந்தியாவில் 16 இடங்களில் உள்ளது. தோஷம் வரும் என வைர நகைகளை அணிவதற்கு சிலர் பயப்படுவார்கள். எங்களின் வைரங்கள் தோஷம் இல்லாத நவீன வைரம். அதற்கான உத்தரவாதத்தை தருகிறோம். பெண்களை எளிதாக கவரக்கூடிய இடம் இதுபோன்ற கண்காட்சிகள்தான். இந்த கண்காட்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் கண்காட்சியையொட்டி எங்களிடம் நகைகள் வாங்குபவர்களுக்கு 40 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பண சேமிப்பு பெண்களை சுதந்திரமாக செயல்பட வைக்கும்: எல்.ஐ.சி. அதிகாரி தந்த டிப்ஸ்..
பண சேமிப்பு என்பது பெண்களை அவர்கள் வாழ்வில் சுதந்திரமாக செயல்பட வைக்கும் என எல்.ஐ.சி. அதிகாரி தினசந்திரன் கூறினார். தோழி ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்ற அவர், வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசியின் பயன்களை விளக்கிக் கூறினார். அவர் கூறுகையில், பணம் என்பது இன்றி அமையாத ஒன்றுதான். அதுவும் தனியாக வாழும் பெண்கள் இந்த சமூகத்தில் தைரியமாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சேமிப்பு என்ற ஒன்று இருக்க வேண்டும். இதனால் அவர்கள் யாரையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எல்.ஐ.சி-யின் ஜீவன் உத்சவ், ஒரு தனி நபர் சேமிப்பு மற்றும் முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இதனை பெண்கள் எடுத்து வைத்துக் கொள்வது சிறந்த முடிவு. இதன்மூலம் அவர்களின் இறுதி நாட்கள் வரை யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களால் வாழ முடியும். இத்திட்டத்தில் 90 நாட்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீடு பாதுகாப்பும் உண்டு என்றார்.

வங்கியில் பெண்களுக்கான தனித்துவமான திட்டம்: கனரா வங்கி அதிகாரி பெருமிதம்
கனரா ஏஞ்சல் திட்டம் பெண்களுக்கான தனிப் பயனாக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு. இதனை தோழி கண்காட்சி மூலம் பெண்களிடம் எடுத்துக் கூறுவதில் மகிழ்ச்சி என சென்னை வட்டார அலுவலர் சிந்து கூறினார். இதுகுறித்து அவர் கூறியது: பெண்களுக்கு நாங்கள் வழங்கும் திட்டங்களை அவர்களுக்கு எடுத்து கூறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கனரா வங்கி பெண் தொழில் முனைவோர்களுக்கு நல்ல பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் கனரா ஏஞ்சல் திட்டம். இது பெண்களுக்கான கேன்சர்கேர் பாலிசி, கனரா ரெடிகேஷ் எனப்படும் முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் மற்றும் கனரா மைமனி என்ற டெர்ம் டெபாசிட் தயாரிப்புக்கான ஆன்லைன் லோன் போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான சேமிப்பு கணக்கு. இதற்கு முன்வைப்புத்தொகை ஏதும் கிடையாது. சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது பெண்களுக்கு இலவசமாக தொடங்கலாம். 18 வயது முதல் 70 வயதுடைய பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த சேமிப்புக் கணக்கை தொடங்கலாம். 3 முதல் 10 லட்சம் வரை பலன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தொழில்முனைவோர்களுக்கான கடன் திட்டங்களை எடுத்துரைக்க தோழி கண்காட்சி பெரிதும் உதவும்: யூனியன் பேங்க் வட்டார அலுவலர் முத்து ரத்னம்
தோழி கண்காட்சியை இனி வருடந்தோறும் நடத்த வேண்டும் என யூனியன் பேங்க் வட்டார அலுவலர் முத்து ரத்னம் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நமக்கு தேவையான ஒன்றை உரிமையுடன் நண்பர்களிடம்தான் கேட்க முடியும். அப்படித்தான் இந்த தோழி கண்காட்சியும். பெண்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள இந்த கண்காட்சி அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது ஒவ்வொரு வருடமும் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களுக்கு எங்கள் வங்கியில் உள்ள சிறப்பு கடன் திட்டங்களை பற்றி எடுத்துரைப்பதற்கு இதுபோன்ற இடங்கள்தான் சிறந்ததாக இருக்கும். புதிதாக தொழில் புரிய விரும்பும் பெண்களுக்கு பணம் என்பது பெரும் பிரச்னையாக இருக்கும். யாரை நம்பி கடன் கேட்பது என்ற பயம் கூட இருக்கும். நம்பிக்கையான இடம் தேதி அலைவார்கள். அவர்களுக்காகவே யூனியன் நாரி சக்தி என்ற ஒன்றை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முகத்தை மட்டுமே ஸ்கேன் செய்து உடலின் பிரச்னைகளை அறியும் செயலி அறிமுகம்: சென்னை லைஃப்லைன் மருத்துவமனை புதிய முயற்சி
முகத்தை மட்டுமே ஸ்கேன் செய்து பெண்களின் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை கண்டறியம் புதிய செயலியை உருவாக்கியுள்ளதாக சென்னை லைஃப்லைன் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி மருத்துவர் நடேஷ் கூறியுள்ளார். தோழி கண்காட்சி மூலம் அவர் கூறியதாவது: பெண்களுக்கான சிகிச்சையில் நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். தற்போது உள்ள காலக்கட்டத்தில் மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களை அதிகமாக தாக்குகிறது. பெரும்பாலான பெண்கள் அதனைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். நாங்கள் எங்கள் மருத்துவமனை மூலம் அதுகுறித்த விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம்.

சமீபத்தில் 5 ஆயிரம் பெண்களுக்கு நடத்திய பரிசோதனை மூலம் 3 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்கிறோம். அதன்படி, முகத்தை மட்டுமே ஸ்கேன் செய்து, ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றை கண்டறியும் எளிய வகையிலான ட்ரஸ்ட் என்ற செயலி ஒன்றை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதனால் சில நிமிடங்களில் நமது உடலின் பிரச்னைகளை கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த தாய்ப்பால் கொண்டு வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள்
கண்காட்சி அரங்கு ஒன்றில் தாய்ப்பால் மற்றும் பிறந்த குழந்தைகளின் தலைமுடிகளை கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட அணிகலன்கள் காண்போரை கவரச் செய்தது.இதுகுறித்து அதன் விற்பனை பிரதிநிதி தாரிகா கூறியதாவது: தாய்ப்பால், குழந்தையின் தலைமுடி, தொப்புள் கொடி போன்றவற்றை கொண்டும் தங்கம், வெள்ளி நகைகளை விற்பனை செய்து வருகிறோம். விருப்பபடுபவர் தகவல் கொடுத்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தாய்ப்பால் மற்றும் குழந்தையின் தலைமுடி, தொப்புள்கொடி போன்றவற்றை பெற்று மோதிரம், வளையல், பிரேஸ்லெட் போன்ற அணிகலன்களை செய்து தருகிறோம். தற்போது இந்த ஷாப்பிங் திருவிழாவில் எங்களது பொருட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது மட்டுமின்றி ஏராளாமானோர் இதை வாங்கியும் செல்கின்றனர் என்றார்.

ஆயூர்வேதிக் கிரீம் விற்பனையாளர் சக்தி தேவி பேசியதாவது: ஆயுர்வேதிக் மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட தோல் பாதுகாப்பு கிரீம்களை கை வைத்திய முறையில் செய்து விற்பனை செய்கிறோம். அந்தவகையில், செம்பருத்தி, மருதாணி போன்ற பூக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை முறை கிரீம்களை காம்போ விலையில் விற்பனை செய்கிறோம் என்றார். இதுதவிர, தோழி ஷாப்பிங் திருவிழாவில் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், காட்டன் புடவைகள் பெண்களை கவர்ந்து இழுத்தது. குறிப்பாக, காட்டன் சேலைகள், பாலி காட்டன், செமிசில்க், சாப்ட் சில்க் மற்றும் பார்ட்டிவேர் புடவைகள், கல்யாணப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் கடுகு, மிளகு, சீரக பேஸ்டுகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டன இதுமட்டுமல்லாது எலக்ட்ரானிக் பொருட்கள், சமையலறை சாதனங்கள் காம்போ விலையில் விற்கப்பட்டன. அது உடல் வலியை போக்கக்கூடிய மசாஜ் சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள், சென்ட் பாட்டில்கள், பேஷன் சேலைகள், சுடிதார் போன்ற போன்ற ஆடைகள் சலுகை விலையில் விற்கப்பட்டன.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi