கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோழியும் போய், குரலும் போச்சேன்னு’’ போலி ரெய்டால பாதிக்கப்பட்டவங்க புலம்புறாங்களாமே’’ன்னு ேகட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்துல சாராயம், குட்கா போன்ற போதைபொருட்கள் தடுக்குறதுல போலீசார் தனி கவனம் செலுத்துறாங்க. அதோடு டாஸ்மாக் சரக்குகளையும், மிலிட்டரி சரக்குகளையும் 24 மணி நேரமும் பிளாக்ல கூடுதல் விலைக்கு விற்குறவங்களையும் கையும், களவுமா பிடிச்சு கேஸ் போட்டு கைது பண்றாங்க. இந்த கேஸ்கள்ல மதுபாட்டில்களை பறிமுதல் செஞ்சு கணக்கு காட்றாங்க. இதை சாதகமா பயன்படுத்திட்டு வெயிலூர் மாவட்டத்துல தில்லாலங்கடி வேலை நடந்திருக்கு. காட்டுப்பாடில வண்டல்ல தொடங்கி தாங்கல்னு முடியும் ஏரியாவுல ஒரு சில மிலிட்டரிகாரங்க வீடுகள்ல, அவங்களுக்காக கேன்டீன்ல கிடைக்கும் மதுவை வாங்கி பிளாக்ல விக்குறாங்களாம்.

இதை மோப்பம் பிடிச்சு கடந்த 2 நாளுக்கு முன்னாடி குறிப்பிட்ட வீடுகளுக்கு போன 2 மர்ம ஆசாமிகள் மிலிட்டரி சரக்கு கிடைக்குமான்னு கேட்டு இருக்குறாங்க. அவங்களும் வழக்கம்போல சரக்கு எடுத்து கொடுத்துட்டு, ‘டாஸ்மாக் கடை திறக்குறதுக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்குது. இப்போ சரக்கு கொடுக்குறதால புல் பாட்டிலுக்கு ஆயிரம் ரூபாய்ன்னு’ கேட்டு இருக்குறாங்க. உடனே சரக்கு வாங்குனவங்க பாக்கெட்டுல இருந்து பேப்பர் எடுத்து எழுதியபடி, ‘நாங்க கள்ளத்தனமா மது விற்பனை நடக்குறத தடுக்கும் ஸ்பெஷல் போலீஸ் டீம். இப்போ இந்த பாட்டில பறிமுதல் பண்ணிட்டோம். உங்களுக்கு ₹2 ஆயிரம் பைன்’ அப்படின்னு அதிர வச்சாங்களாம். வேற வழியில்லாம பைன் கட்டியவங்க ‘கோழியும் போய், குரலும் போச்சேன்னு’ புலம்பிட்டிருந்த நிலையில, ரெய்டு நடத்தினவங்க போலி போலீஸ்னு விஷயம் தெரிஞ்சு மேலும் அதிர்ச்சியடைஞ்சு இருக்காங்க. ஆனா, இதுக்ெகல்லாம் போலீஸ்ல புகாரா கொடுக்க முடியும்னு திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி கம்முன்னு இருக்காங்களாம். இந்த விவகாரம்தான் இப்போ அந்த ஏரியாவுல பரபரப்பா பேசப்படுது’’ன்னு விளக்கினார் விக்கியானந்தா.

‘‘ஜிபே நம்பரை கொடுத்தே லஞ்சம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாமே?’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் தலைமையிடத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சில அதிகாரிகள் சாதாரணமா தரவேண்டிய சான்றிதழ்களைக்கூட வழங்காமல் மக்களை பிழிந்து எடுக்குறாங்களாம். வைட்டமின் ‘ப’ இருந்தால் மட்டுமே அதிகாரிகளிடம் இருந்து கனிவான பதில் கிடைக்கும். இல்லையென்றால் துரத்தல்தான் நடக்கிறதாம். இவ்வளவு வேண்டும் என்று போனில் அழைத்து பேசுகிறார்களாம். கூடவே எங்களுக்கு இல்லை, உயர் அதிகாரிக்கு கொடுக்க வேண்டும் என்று ‘ஜிபே’ நம்பரை வேறு கொடுக்கிறார்களாம். இதனால் விண்ணப்பத்துடன் செல்கின்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்களாம். யாருக்கும் தெரியாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் காசு பார்ப்பது ஒருபுறம் இருக்க இப்படி ஆதரத்துடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்களா? என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். இதற்கு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் பெற்றாலும் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் இருக்கின்ற இடத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு இருப்பதும் ஒரு காரணமாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் ரிசல்டுக்கு பின் மவுனமாக இருந்து வரும் மாஜி அமைச்சர், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டம் போட்டிருக்கிறாராமே’’- அரசியலுக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறார். தேனிக்காரர் தேர்தலில் படுதோல்வி என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருவதால் அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரிடம் இருந்து விலகி செல்கின்றனர். ஆனால், ‘வைத்தியானவர்’ மட்டும் மவுனமாக இருந்து வருகிறாராம்… இதனால் வைத்தியானவரின் ஆதரவாளர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்… இதை சரிக்கட்ட இதற்கான வேலைகள் திரைமறைவில் நடந்து வருகிறதாம்… இந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில், தனது ஆதரவாளர்களை நேரில் அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் வைத்தியானவர் தனது ஆதரவாளர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடிவு செய்துள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் வலை விரிச்சிருக்காராமே?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியை தொடங்கிய தலைவரின் இதயத்தில், இளம்வயதிலேயே செல்லப்பிள்ளையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், துணை சபாநாயகராகவும் பணியாற்றியவர், ஊர் பெயர் ஒன்றை தாங்கி பிடிக்கும் அரசராம். மம்மி காலத்தில் அவருக்கு குடைச்சல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பின்னொரு நாளில் அவருக்கு எல்லாமுமாக இருந்தவராம். பின்னர், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர், கட்சி ஒன்றையும் ெதாடங்கினாரு. இப்படி அவரது பேக்ரவுண்டை சொல்லிக்கிட்டே போகலாம். பிறகு மலராத கட்சிக்கு போய் மந்திரியாகவும் இருந்துட்டு, சீச்சீ இந்த பழம் புளிக்குமுன்னு வெளியே வந்துட்டாரு. அதன்பிறகு கதர்சட்டையை அணிந்துக்கிட்டு, அக்கட்சியின் மாநில தலைவர் பொறுப்புக்கும் வந்தாரு. மலைக்கோட்டையில் எம்பியாகவும் இருந்த அவருக்கு நடந்து முடிந்த தேர்தலில் சீட்டு ெகாடுக்கலையாம். இதனால ெராம்பவே அப்செட்டாக இருக்காராம்.

இதனை தெரிஞ்சிக்கிட்ட தற்போதைய இலைக்கட்சி தலைவர், அவருக்கு வலை விரிச்சிருக்காராம். சின்னமம்மி, குக்கர், தேனீக்காரர் என ஒரு கூட்டத்தையே சமாளிக்கும் சக்தி, அந்த கதர்சட்டைக்காரருக்கு இருக்குதுன்னு நம்புறாராம். அவரை இலைக்கட்சிக்குள் இறக்கிட்டா, தென்மாவட்டத்தில் சரிந்து போன கட்சியை தூக்கி நிறுத்திடலாமுங்குற திட்டம் வச்சிருக்காராம். இதற்காக கதர்சட்டை கட்சிக்காரரிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்காம். சீட் கிடைக்காமல் வேதனையுடன் இருக்கும் தன்னையும் நம்பி, இலைக்கட்சிக்கு அழைக்கிறாங்களேன்னு அவருக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சாம். நீங்க இருபெரும் தலைவர்கள் கூட இருந்திருக்கீங்க. உங்களுக்கு அனுபவம் அதிகமாக இருக்கு. அப்படியே இலைக்கட்சிக்கு திரும்ப வந்தீங்கன்னா, இரு தெய்வத்தலைவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்குமுன்னு பேசியிருக்காங்க. அதே நேரத்தில் வந்தவுடன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் சொல்லியிருக்காங்க. இனிமேல் கதர்கட்சியில் இருந்தால், எந்த நன்மையும் கிடைக்காதுன்னு அவருக்கு நல்லாவே தெரிஞ்சிப்போச்சாம். இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கிறதுக்கு டைம் கொடுங்கன்னு கேட்டிருக்காராம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சொல்லிட்டாங்க…

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்