வர்லாம்.. வர்லாம்.. வா.. நிதிஷூக்கான கதவுகள் திறந்தே இருக்கும்: லாலு பிரசாத் மறைமுக அழைப்பு

பாட்னா: நிதிஷ் குமாருக்காக மகாகத் பந்தன் கூட்டணியின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மகாகத் பந்தன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. கடந்த ஆண்டு நிதிஷ் குமார் முன்னின்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை உருவாக்கினார்.

இந்நிலையில் இந்தியா கூட்டணியுடனான உறவை முறித்து கொண்டு மீண்டும் பாஜவில் இணைந்த நிதிஷ் குமார் பீகாரின் 9வது முதல்வராக கடந்த மாதம் 28ம் தேதி பதவி ஏற்று கொண்டார். நிதிஷ் அரசு மீது கடந்த 12ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 எம்எல்ஏக்கள் நிதிஷ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் இனி பாஜ கூட்டணியை விட்டு எப்போதும் வௌியேற மாட்டேன் என உறுதியாக தெரிவித்திருந்தார்.

நிதிஷ் குமாரின் செயல்பாடுகளால் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் வேதனையில் இருந்தார். இந்த சம்பவங்களுக்கு பிறகு முதன்முறையாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், “நிதிஷ் குமார் மீண்டும் எங்கள் கூட்டணியில் இணைய விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவருக்காக மகாகத் பந்தன் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று இவ்வாறு கூறினார்.

Related posts

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.12% நீர் இருப்பு உள்ளது