Wednesday, July 3, 2024
Home » கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

நெருக்கமாய் அமர்ந்திருக்கும் நரம்புகள்

கடந்த மாதம் நம் மாநிலத்தில் பலர் வைரஸ் தொற்று காரணமாக சளி, காய்ச்சல், தலைவலி போன்ற தொந்தரவுகளால் அவதிப்பட்டார்கள். ஒவ்வொரு சீசனிலும் பரவும் வைரஸ் கிருமிகள் நோயாளிகளிடையே ஒரு சில பொதுவான விளைவுகளை‌ (pattern) ஏற்படுத்துவதைப் பார்க்க முடியும்.‌ நிறைய பேருக்கு மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னை போன்ற தொந்தரவுகள் வந்தன. வேறு சிலருக்கு மூச்சிரைப்பு, இருமல் போன்ற நுரையீரல் பிரச்னைகள் தோன்றின. பொதுவாகவே சைனஸ் பிரச்னை உடையவர்களின் முக்கிய அறிகுறி கண்களை சுற்றியுள்ள பகுதியில் அதிக வலி ஏற்படுவது தான். கீழே குனியும் பொழுதும், கண்களை ஆங்காங்கே உருட்டும் பொழுதும் வலி ஏற்படுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.

அனிதா நடுத்தர வயது இல்லத் தரசி. அவரது வலது கண்ணைச் சுற்றிலும் வலி ஏற்படவே மிகுந்த பதற்றத்துடன் மருத்துவமனைக்குத் தன் பழைய அறிக்கைகள் பலவற்றையும் கொண்டு வந்தார். ‘‘மேடம்! எனக்கு முன்னாடி ஒரு தடவை இடது கண்ணை அசைக்கவே முடியாமல் ஆச்சு. பார்வையும் குறைஞ்சுச்சு. மூளையில் ஏதோ பிரச்னைன்னு சொன்னாங்க. இப்ப வலது கண்ணிலும் அதே மாதிரி வந்துருமோன்னு பயமா இருக்கு” என்றார்.

அவரது பரிசோதனை அறிக்கைகளை வாசித்துப் பார்க்கையில் அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இடது கண் பகுதியில் total ophthalmoplegia என்ற பிரச்னை ஏற்பட்டது தெரிந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கண்ணை இடது பக்கம், வலது பக்கம், மேலே கீழே இன்று எந்த திசையிலும் உருட்ட இயலாமல் போய்விடும். கூடவே அவரது ஆப்டிக் நரம்பிலும் பிரச்னை ஏற்பட்டிருந்தது. உடனடியாக மருந்து செலுத்தி வேறு தொடர் சிகிச்சைகளைச் செய்ததில் ஓரிரு வாரங்களில் அவரது கண் இயல்பு நிலைக்கு சற்று அருகே மீண்டிருந்தது.

இப்படி கண்களை அசைக்க முடியாமல் போனதற்கு, அதுவும் ஒரு கண்ணில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அவரது பரிசோதனை அறிக்கைகளில் தேடினேன்.
அவருக்கு இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் முக்கிய ரத்த நாளமான internal carotid arteryயில் ஒரு பிரச்சனை. அதில் ஏற்பட்ட அடைப்பினால் அருகில் இருந்த கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவரால் கண்ணை அசைக்க முடியவில்லை. அதன் காரணமாக பார்வை இரட்டையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

வலது கண் நம் தேவைக்கு ஏற்ப சீராக ஆங்காங்கே அசைகையில், இடது கண் மட்டும் ஒரே நிலையில் பார்த்துக் கொண்டிருந்தால் என்னவாகும்? இரண்டு கண்களில் இருந்தும் வேறு விதமான காட்சிகள் மூளைக்குக் கடத்தப்படும். இரு வேறு காட்சிகள் மூளையை அடைவதால் மூளையால் அதை ஒன்றிணைக்க முடியாமல் இரட்டையாகப் பார்வை தெரியும். அதுதான் அனிதாவுக்கு நடந்தது. அந்தப் பிரச்னையின் போது வெகுவாகக் குறைந்திருந்த அவருடைய பார்வை சிகிச்சையின் பின், படிப்படியாக மீண்டு இறுதியாக 6/12 என்ற நிலையில் இருந்தது. இதே தொந்தரவு வலது கண்ணிலும் வந்துவிட்டதோ என்பதுதான் அனிதாவின் கவலை.

‘‘பதட்டப்படாதீர்கள், பொறுமையாக பார்ப்போம், சென்ற முறை இடது கண் மூடி இருந்தது அல்லவா, இப்பொழுது அப்படி இல்லையே? திறந்து தானே இருக்கிறது?\” என்று கூறிவிட்டு பரிசோதனையைத் தொடங்கினேன். டார்ச் வெளிச்சத்தைக் கண்களில் பாய்ச்சியதில் கண்மணிகள் இரண்டு கண்களிலும் சீராக சுருங்கி விரிந்தன. இடது புறம் பாருங்கள், வலது புறம் பாருங்கள் மேலே, கீழே கண்களைச் சுழற்றுங்கள் என்று கூற அனிதாவும் அவ்வாறே செய்தார்.

அவருடைய இரண்டு கண்களையும் அனைத்துத் திசைகளிலும் சீராக அவரால் உருட்ட முடிந்தது. எந்த இடத்தில் வலி இருக்கிறது என்று கேட்டதற்கு, புருவத்தின் அருகில் கையை வைத்துக் காட்டினார்.‌கண்ணுக்குச் சற்று மேலே புருவத்திற்குக் கீழான பகுதியில், கைகளால் லேசாக அழுத்தம் கொடுத்ததில், ‘‘அங்கே தான் வலிக்குது.. கரெக்ட்!” என்று உறுதிப்படுத்தினார்.

சமீபத்தில் சளி, காய்ச்சல் வந்து போனதா என்று கேட்டேன். பத்து நாட்களுக்கு முன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் வந்தது. கணவருக்கு வறட்டு இருமல் இன்னும் தொடர்கிறது என்றார். எப்பொழுது இந்த வலி அதிகரிக்கிறது என்றதற்கு, காலையில் அதிகமாக உள்ளது, மதியம் வரவர கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கிறது என்றார். இன்னும் சில பரிசோதனைகளையும் செய்து விட்டு இது சைனஸ் தொந்தரவால் ஏற்பட்ட வலி தான், இதற்கும் முந்தைய பிரச்னை தொடர்பில்லை. அடிக்கடி ஆவி பிடியுங்கள், தேவையெனில் மூக்கிற்குச் சொட்டு மருந்து ஊற்றிக் கொள்ளலாம், ஒரு முறை காது மூக்கு தொண்டை நிபுணரையும் சந்தித்து விடுங்கள் என்று கூறினேன். பெரும் நிம்மதியுடன் விடைபெற்றுச் சென்றார் அனிதா.

பிற உறுப்புக்களை விட கண் மிகவும் சிறிதானது. அதனுடன் தொடர்புடைய நரம்புகள், ரத்தநாளா அமைப்புகள் தசைகள் அனைத்தும் மிகச் சிக்கலானவை. மூளைக்கு வெகு அருகில் அமைந்திருப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகளும் கண்களைப் பாதிப்பதுண்டு. கூடவே மூக்கு, காது, பல் இவற்றின் பிரச்னைகளிலும் கண் பகுதியில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அனிதாவுக்கு இடது கண்ணிற்கு பின்புறம் வரிசையாக அமைந்திருக்கும் நரம்புகளின் பகுதியில் லேசான அழுத்தம் நிகழ்ந்திருந்தது.

இப்போது கண்களுக்கு சற்று மேலே, பக்கவாட்டிலும் இருக்கும் சைனஸ் என்று கூறப்படும் பலூன் போன்ற காற்றுப் பைகளில் நீர் புகுந்து விட்டது. மூளையில் ஏற்பட்ட நரம்பு பிரச்னையை விட ஒப்பீட்டு அளவில் சைனஸ் பிரச்னை பலருக்கு ஏற்படக்கூடியது மற்றும் விரைவில் சரியாகக்கூடிய ஒன்று.

அவருக்கு விரைவாக சிகிச்சை அளித்ததில் இரண்டு நோய்களுமே எளிதில் விடை பெற்று விட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய தோழியான மருத்துவர் ஒருவருக்கும் கிட்டத்தட்ட இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. முதலில் தலைவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இடது கண்ணில் பார்வை இரட்டையாகத் தெரிந்தது. கூடவே கண்களை உருட்டுவதில் சிக்கல் ஏற்பட, அதைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே வலது கண் பகுதியிலும் அதே பிரச்னை ஏற்பட்டது.

மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று கண் பார்வை மங்கினால் எவ்வளவு பதற்றம் ஏற்படும்? அதே பதற்றம் தோழிக்கும் ஏற்பட்டது. பின் அவருக்கும் தொடர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஸ்டீராய்டு ஊசிகளும் வழங்கப்பட்டது ஒரு வாரத்திற்குள்ளாக இயல்பு நிலைக்கு அவர் திரும்பினார். அவருக்கு ஏற்பட்ட பிரச்னை மிக அரிதான ஒரு பிரச்னையான Tolosa Hunt syndrome என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கண்கள் அமைந்திருக்கும் எலும்புப் பகுதியான Orbit என்ற பகுதியில் சில மென்திசுக்கள் உருவாகி, நரம்புகளின் மேல் அழுத்தம் கொடுத்தது தான் காரணம். எந்த ஒரு தொற்று நம் உடலுக்குள் நுழைந்தாலும் அதை எதிர்த்து நம் உடல் போராடும், சில எதிர்வினைகளை ஆற்றும் என்பதை நாம் அறிவோம். சில எதிர்வினைகள் சற்று அதிகமானதாய் அமைந்து, அவையே தனியான நோய்களாக மாறி விடுகின்றன. தோழி பல நோயாளிகளை பார்த்த சமயம் எப்படியோ சில காசநோய்க் கிருமிகள் அவரது உடலில் புகுந்திருக்க, அந்தக் கிருமிகளுக்கு எதிராக அவரது உடல் எதிர்வினை ஆற்றியதால் வந்த விளைவு தான், கண்ணின் நரம்புகள் நெருக்கமாக இருக்கும் பகுதியில் மென் திசுக்கள் உருவாகக் காரணம்.

இவை பெரும்பாலும் அழற்சியுடன் சேர்ந்த ஒரு எதிர்வினைதான் என்பதால் இவருக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் உடனடியாகக் கை கொடுத்தன. கண் தொடர்பான பிரச்னைகள் இரண்டு வாரங்களுக்குள் சரியாகி விட்டன. பின் உடலில் இருக்கும் காசநோய்க் கிருமிகளை அழிப்பதற்கான கூட்டு மருந்து சிகிச்சையும் துவங்கப்பட்டது. ஆறு மாதத்தில் முழுவதுமாக சிகிச்சை முடிவடைந்தது. இவருக்கு அந்த திசுக்கள் உருவான இடம் Orbital apex என்ற பகுதி. இதன் வழியாகத்தான் மூளைக்குள் இருந்து இரண்டு, நான்கு, ஆறு ஆகிய நரம்புகள் உள் நுழைகின்றன. மிகச்சிறிய துவாரமான இதில் இந்தத் திசுவும் சேர்ந்ததால் கண்களில் அறிகுறி ஏற்பட்டது.

இந்த வகை பிரச்னைகள் மூளையில் கண்பந்திற்கு மிக‌ அருகில் இருக்கும் Cavernous sinus என்ற பகுதியிலும் உருவாகக் கூடும். ரத்த நாளங்கள் நரம்புகளும் இந்தப் பகுதி வழியாகவும் நெருக்கமாகச் செல்லும் என்பதால், இந்தப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகள் கண்களை நேரடியாகப்‌ பாதிக்கின்றன. எனக்குத் தெரிந்த நோயாளி ஒருவர் ஒரு நாள் லேசாக ஆடிக்கொண்டிருந்த பல்லை விரலால் ஆட்டியபடியே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மயக்கமாகிவிட்டார்.

சுயநினைவற்ற நிலையில் இருந்த அவரை, தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று நான் பரிசோதித்த போது, கண்ணை இயக்கும் நான்கு நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அறிகுறிகளை வைத்து இது cavernous sinus syndrome என்று நான் கூற, பொது மருத்துவர் சிகிச்சையைத் துவங்கினார். மூன்று நாட்கள் கழித்து சுய நினைவு திரும்பிய பின்னர் அவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்பட, cavernous sinus பகுதியில் சீழ் கோர்த்திருந்ததும், எங்கள் சிகிச்சையின் விளைவாக அது குறையத் துவங்கியிருந்ததும் உறுதியானது. மனித உடலின் மிகச் சிக்கலான உடற்கூறியலை நம் முன்னோர்களான மருத்துவ மாமேதைகள் அறிந்து வைத்திருந்ததால் மருத்துவரான என் தோழிக்கும், மேலே குறிப்பிட்ட அனிதாவிற்கும் பார்வை காப்பாற்றப்பட்டது!

You may also like

Leave a Comment

fifteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi