கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

4 தலைவலிகள்4 காரணங்கள்!

எந்தவொரு கண் மருத்துவமனையிலும் ‘தலை வலிக்கிறது’ என்ற அறிகுறியுடன் வரும் நோயாளிகள் பலரைப் பார்க்க முடியும். அன்றைய தினம் வரிசையாக நான்கு நோயாளிகளை சந்தித்தேன். நான்கு பேருடைய தொந்தரவும் தலைவலி தான். முதலில் வந்தவர் ஒரு 60 வயது பெரியவர். இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு, ‘தாங்க முடியாத அளவிற்குத் தலைவலி’ என்றார். உயர் ரத்த அழுத்தத்தால் வரும் தலைவலி தான் ஒருவர் தன் வாழ்நாளில் இதுவரை சந்தித்ததிலேயே மிக மோசமானது என்பது மருத்துவத்தின் பாலபாடங்களில் ஒன்று. ‘The worst headache I have ever had’ என்பார் நோயாளி. உடனடியாக ரத்த அழுத்தமானியை எடுத்துப் பரிசோதித்ததில் பெரியவரின் ரத்த அழுத்தம் 210/120 mmHg என்ற அளவில் இருந்தது தெரிந்தது. விரைவாக ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய மாத்திரைகளைக் கொடுத்து, உடனே உள்நோயாளியாகச் சேருமாறு அறிவுறுத்தினேன்.

அடுத்து வந்தவர் 48 வயதான ஆண். ஏற்கனவே அறிமுகமான நண்பர் தான். ஒரு வணிகவளாகத்தில் பாதுகாவலராகப் பணிபுரிகிறார். கடந்த ஒரு வாரமாக, தலையின் ஒரு புறம் மட்டும் விண்ணென்று வலிக்கிறது, சில சமயங்களில் ஷாக் அடித்தாற்போல் சுறுசுறு என்று இருக்கிறது என்றார். கண்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் வயதுக்கேயுரிய கிட்டப்பார்வைக் குறைபாட்டைத் தவிர வேறு பிரச்சனைகள் இல்லை. கழுத்தெலும்புகளில் அழுத்தம் கொடுத்துப் பரிசோதித்ததில் கழுத்தின் முதல் இரண்டு எலும்புகளின் (first and second cervical vertebrae) பக்கவாட்டில் வலி இருந்தது. நண்பர் நீண்ட நேரம் வாகனத்திலும் பயணிப்பவர். மிக அதிக கனமுடைய வாகனமான புல்லட் வண்டியை வைத்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கழுத்து எலும்பின் தேய்மானம் காரணமாக இருக்கலாம் என்று கூறி, உரிய நிபுணரை பார்க்கச் சொன்னேன்.

மேலே கூறிய இருவருக்கும் கண் தொடர்பான பிரச்சனைகள் இல்லை. பெரியவருக்கு ரத்த அழுத்தம் சீரான வுடன் தலைவலி ஓடிப் போய்விடும். நமது நண்பர், தான் நிற்கும், அமரும் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஸ்டூலில் அமர்ந்துகொண்டே குனிந்த வாக்கில் செல்ஃபோன் பார்க்கிறார். அதை முறைப் படுத்த வேண்டும். சிறிய வாகனம் ஒன்றை வாங்கி, வண்டியில் பயணிக்கும் அளவையும் குறைத்துக் கொண்டால் மிக விரைவில் இயல்பாகி விடுவார். கூடவே சில உடற்பயிற்சிகளையும் அவர் தொடர்ந்து செய்தால் இதே போன்ற தலைவலி மீண்டும் வராது.

அடுத்து வந்த இரண்டு நோயாளிகளும் பெண்கள். அவர்களுக்கும் தலைவலிதான் அறிகுறி. அதில் முதலாவது வந்தவருக்கு 25 வயது. ஒரு மாதமாய் தினமும் மாலை நேரமானதும் நெற்றிப் பகுதியில் வலிக்கிறது, கண்கள் சோர்வாக உணர்கிறேன் என்றார். வேலைக்குச் செல்கிறீர்களா, என்ன மாதிரியான வேலை? என்று கேட்டதற்கு, இவ்வளவு நாட்களாக எந்த வேலைக்கும் செல்லவில்லை, கடந்த ஒரு மாதமாகத்தான் கணிப்பொறியில் பணிபுரிகிறேன் என்றார். அவருடைய கண்களைப் பரிசோதனை செய்ததில், இரண்டு கண்களிலும் Snellen அட்டையில் அவரால் ஒரு பெரிய எழுத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. இதனை 6/60 என்று குறிப்பிடுவோம். பொருத்தமான லென்ஸ்களை மாட்டிப் பார்த்ததில் அவரால் இறுதி வரி‌‌ வரை (6/6) எளிதாக வாசிக்க முடிந்தது.

‘சிறு வயதில் கண்ணாடி அணிந்திருக்கிறீர்களா? இதற்கு முன் எப்போது பரிசோதனை செய்தீர்கள்?’ என்று கேட்டேன். பள்ளியில் படிக்கும் பொழுது இலவசமாகக் கண்ணாடி கொடுத்ததாகவும், அதை சில நாட்கள் மட்டுமே அணிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவருடைய கண் பார்வைக் குறைபாட்டிற்கு காரணம் அவரது கண் பந்து பொதுவான அளவைவிட மிக லேசாக பெரிதாக இருப்பது தான். ‘‘சிறுவயதிலிருந்தே உங்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்திருக்கிறது. இதுவரை நீங்கள் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கவில்லை, அதனால் அறிகுறிகள் குறைவாக இருந்திருக்கும். நீங்களும் இருக்கும் பார்வையை வைத்தே வாழப் பழகியிருக்கிறீர்கள் இப்போது கண்ணிற்கு இயல்பான வேலையைக் கொடுத்தவுடனே வலி வருகிறது, கட்டாயம் கண்ணாடி அணிய வேண்டும்” என்று கூறினேன்.

ஒருவேளை இந்தக் கணினி வேலையை மாற்றிவிட்டால் சரியாகிவிடுமா, இதுதான் பார்வை குறைபாட்டிற்குக் காரணமா என்று கேட்டார் அவர். இதைப் போன்ற தவறான புரிதல் பலரிடம் இருக்கிறது. சிறுவர்களுக்கு கண் பரிசோதனை செய்து பார்வைக் குறைபாடு இருப்பதை சுட்டிக்காட்டுகையில் பெரும்பாலான பெற்றோர்கள், அதிக நேரம் டிவி பார்க்கிறான், செல்ஃபோன் பார்க்கிறான், அதனால்தான் இவனது கண் கெட்டுப் போய்விட்டது என்று குற்றம் சுமத்துகின்றனர். அதிக நேரம் தொலைக்காட்சி, அலைபேசி முதலிய வெளிச்சம் உமிழும் திரைகளைப் பார்ப்பது நிச்சயம் ஆரோக்கியமானது இல்லை. ஆனால் இதுதான் கண்ணாடி போடுவதற்கே காரணம் என்ற வாதம் அறிவியல் ரீதியாக ஏற்புடையதல்ல.

இயற்கையாகவே ஒருவருக்கு கண் பந்தின் நீள அகலம் வேறுபட்டிருக்கக்கூடும். இதனால் நாம் பார்க்க விரும்பும் காட்சியை சற்று சிரமத்துடனேயே பார்க்க முடியும். அந்த சிரமத்தை ஈடு கட்டுவதற்காக கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் அதிகமாக இயங்குகின்றன. எந்த ஒரு தசையை அதிகமாகப் பயன்படுத்தினாலும் அதில் வலி ஏற்படுவது இயற்கை தானே, அதனால் தான் கண்ணைச் சுற்றியுள்ள தசைகளின் அதிக வேலையால் தலையில் வலி ஏற்படுகிறது. இந்த இளம் பெண்ணுக்குக் கண்ணாடியைப் பரிந்துரைத்தேன். கண்ணாடிக்கு பதில் வேறு என்ன தீர்வுகள் இருக்கின்றன என்று அவர் கேட்டார்.

தேவைப்பட்டால் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம் என்று கூறி அதன் சாதக பாதகங்களை விளக்கினேன். மேலும் 25 வயதாகிவிட்டதால் இனி பார்வையில் மாற்றம் ஏற்படாது. அதனால் லேசர் உள்ளிட்ட சிகிச்சைகளும் நீங்கள் தகுதியானவர்தான், சில காலம் கண்ணாடி அணிந்துகொண்டு, இதே அளவு பார்வை தொடர்கிறது என்னும் பட்சத்தில் நீங்கள் லேசர் சிகிச்சைக்கு முயலலாம் என்று கூறி அனுப்பினேன்.

நான்காவதாக வந்த நோயாளி ஒரு பெண். அவர் இதற்கு முந்தைய நாளும் பரிசோதனைக்கு வந்திருந்தார். இவரது தலைவலி சற்று வித்தியாசமானது. கண்ணோடு சேர்த்து தலையின் ஒரு பக்கம் வலிக்கிறது, கூடவே பக்கவாட்டுப் பார்வை குறைவாக இருக்கிறது என்றார். முந்தைய பரிசோதனையின் போது பக்கவாட்டுப் பார்வையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தேன். அன்றைய தினம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துக் கொண்டு மறுபரிசோதனைக்காக வந்திருந்தார்.

அவருடைய பிட்யூட்டரி சுரப்பியில் கண்ணின் ஆப்டிக் நரம்பு செல்லும் பாதையில் ஒரு சிறிய கட்டி இருந்து அழுத்தத்தை உண்டுபண்ணி கொண்டிருந்தது. அதுவே அவருடைய தலைவலிக்கும், பக்கவாட்டுப் பார்வையின் குறைபாட்டிற்கும் காரணம். விரைவாக அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தி உரிய நிபுணரிடம் (neurosurgeon) அனுப்பி வைத்தேன். அடுத்து வந்த சில நாட்களில் அவருக்கு வெற்றிகரமாக அந்த கட்டி அகற்றப் பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து விட்ட தகவலைப் பகிர்ந்த அவரது கணவர். பார்வை எந்த அளவில் இருக்கிறது என்பதை‌ அறிய நோயாளி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அழைத்து வருகிறேன் என்றார்.

‘‘இத்தனை விதமான தலைவலிகளா?” என்று கேட்கிறீர்களா? உண்மையில் நான் கூறிய உதாரணங்கள் மிக மிகக் குறைவான அளவுதான். தலைவலி தொடர்பான நோய்களுக்கான சர்வதேச வகைப்பாடு ஒன்று இருக்கிறது. அது தலைவலிக்கு 150க்கும் மேலான காரணங்களை வரிசைப்படுத்துகிறது. (International classification of headache disorders). தலைவலிக்கான காரணங்களை Primary, Secondary என்றும் பிரிக்கின்றனர். வேறு எந்த நோயும் இல்லாமல் தனியாக ஏற்படும் தலைவலி Primary என்ற வகையின் கீழ் வருகிறது.

பிற நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் தலைவலி Secondary என்ற வகையின் கீழ் வருகிறது. சில பிரச்சனைகள் எளிதில் தீர்க்கக் கூடியவை, சிலவற்றின் சிகிச்சை சற்றுத் தீவிரமானது, சில வகையான தலைவலிகளுக்கு நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது பொது மருத்துவர் ஒருவரிடம் நீங்கள் சென்றால் அவர் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பார். அதன் பின் சிலரிடம், ‘கண் பரிசோதனை செய்து வாருங்கள்’ என்பார்.

நிறைய தலைவலி நோயாளிகளுக்கு கண்ணில் சில குறைபாடுகளைக் கண்டுபிடிக்க முடியும். அவற்றை சரி செய்துவிட்டால் தலைவலி ஓடியே போய்விடும். மேலும் சில வகைத் தலைவலிகளுக்கு பொது மருத்துவர் காது- மூக்கு- தொண்டை நிபுணரைப் பார்க்குமாறு அறிவுறுத்துவார். சைனஸ் உள்ளிட்ட பிரச்சனைகளால் தலைவலி ஏற்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தவுடன் அந்தத் தலைவலியும் பறந்து விடும். மேலும் சில நோயாளிகள் நரம்பியல் நிபுணரை பார்க்க வேண்டியிருக்கும். கண், காது- மூக்கு- தொண்டை, நரம்பியல் இந்த மூன்று நிபுணர்களில் ஒருவர் உங்கள் தலைவலிக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கு உரிய சிகிச்சையைப் பரிந்துரைப்பார்!

Related posts

பூண்டு பாலின் நன்மைகள்

நோயை விரட்டும் கண்டங்கத்தரி

மூளையின் முடிச்சுகள்