கத்தாரில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் சித்ரவதை: இந்திய தூதரகம் மீட்டது

சென்னை: கத்தார் நாட்டில், வீட்டு வேலைக்கு சென்று சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணை இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் மாரி ராஜி (42). கணவரை இழந்த இவர், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார். இந்நிலையில், வெளிநாட்டிற்கு வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்கள் சிலர், மாரி ராஜியிடம், கத்தார் நாட்டில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை இருக்கிறது. நல்ல சம்பளம், உணவு தங்குமிடம் இலவசம், பாதுகாப்பான வேலை என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

இதையடுத்து, அந்த ஏஜென்ட்கள், கடந்த ஜூன் மாதம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மாரி ராஜியை கத்தார் நாட்டுக்கு அனுப்பினர். அங்கு தோகா விமான நிலையத்தில், மாரி ராஜியை ஏஜென்ட்கள் அழைத்து சென்று, மூன்று வீடுகளுக்கு அடுத்தடுத்து வேலைக்கு அனுப்பினர். அங்கு, ஓய்வே இல்லாமல் வேலை வாங்கியதோடு, சரியான உணவும் தரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மாரி ராஜி வேலையை விட்டுவிட்டு, ஏஜென்ட்களின் அலுவலகத்திற்கு சென்று, ‘‘நான் இங்கு வேலை செய்ய விரும்பவில்லை.

என்னை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விடுங்கள்’’ என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வந்து ஒரு மாதத்திற்குள் வீடு திரும்புவதற்கு உங்களை அழைத்து வரவில்லை. குறைந்தது, ஒரு ஆண்டாவது இங்கு வேலை பார்க்க வேண்டும். இல்லையேல் ரூ.5 லட்சம் கட்டினால் திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி உள்ளனர். மாரி ராஜி ‘‘என்னிடம் பணம் எதுவும் இல்லை. நான் இங்கு வேலை செய்ய மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்‌. இதையடுத்து ஏஜென்ட்கள், அவரை அறையில் அடைத்து வைத்து, பட்டினி போட்டு, அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

மேலும், ‘‘நாங்கள் சொல்கிற வீடுகளில் வேலை செய்யவில்லை என்றால், பணம், நகைகளை திருடியதாக, புகார் கொடுத்து சிறையில் அடைத்து விடுவோம்’’ என்று மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டனர். இந்நிலையில், மாரி ராஜி, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அங்கிருந்த வேறு ஒருவரின் செல்போன் மூலம் தனது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு, தான் கொடுமைப்படுத்தப்படுவதை தெரிவித்து கதறி அழுதார்.

அவர்கள் மாரி ராஜியை மீட்க, சென்னையில் உள்ள தமிழ்நாடு டொமஸ்டிக் ஒர்க்கர்ஸ் வெல்பர் அமைப்பில் புகார் செய்தனர். அவர்கள், மாரி ராஜியின் நிலைப்பற்றி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, ஒன்றிய வெளியுறவுத்துறை, கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்குள்ள ஐக்கிய தமிழர் அமைப்பினர், இந்திய தூதரகம் உதவியுடன், ஏஜென்ட்களிடம் இருந்து மாரி ராஜியை மீட்டு, இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி இந்திய தூதரக அதிகாரிகள், விமான டிக்கெட் கொடுத்து கத்தாரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மாரி ராஜியை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை சென்னை வந்த மாரி ராஜியை, தொண்டு நிறுவனத்தினர் வரவேற்று, அவரது குடும்பத்தாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

* தற்கொலைக்கு முயன்றதால் மறுபிறவி எடுத்துள்ளேன் – மாரி ராஜி கண்ணீர் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாரி ராஜி பேட்டியில், ‘‘கணவரை இழந்த நான் குடும்பத்தை காப்பாற்ற, வெளிநாடு செல்ல முடிவெடுத்தேன். அப்போது என்னை கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்த ஒரு பெண் ஏஜென்ட், சுலபமான வீட்டு வேலை என்று கூறினார். ஆனால், அங்கு மிகக் கடுமையாக வேலை வாங்கினார்கள். இதனால் எனக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே வேலை செய்ய முடியாது, இந்தியாவுக்கு திரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் ஏஜென்ட்கள் என்னை மிரட்டி, தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர்.

இதனால், தற்கொலை செய்ய நான் ஏஜென்ட்களின் அலுவலக மாடியில் இருந்து கீழே குதித்தேன். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் என்னை இந்திய தூதரகம் உதவியுடன் மீட்டனர். நான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். இனிமேல் வீட்டு வேலைக்கு என்று, ஏஜென்ட்கள் கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, நமது நாட்டு பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது. இதேபோல், பொய் வாக்குறுதி கொடுத்து, பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி, கொடுமைப்படுத்தும் ஏஜென்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை மீட்க உதவிய தொண்டு நிறுவனத்தினர், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு