இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா ஆதரவா?


புதுடெல்லி: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசநாயக்க, ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன், நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் கூட்டணி, வேட்புமனு தாக்கல் என பரபரப்பாக இருந்த தேர்தலில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. முன்னதாக தபால் வாக்குகள் செலுத்தப்பட்டு விட்டன.

இதனிடையே மத்திய கொழும்பு பகுதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்புவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் இறுதி கட்ட பிரசாரத்தில் பங்கேற்றனர். அதேபோல் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமாரா திசநாயக்க, கம்பா மாவட்டத்திலும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதாரம், அனைத்து மக்களின் முன்னேற்றம் என தலைவர்கள் இறுதி கட்ட வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தலை முன்னிட்டு போலீசார், ராணுவம் கூடுதலான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் தற்போது திடீரென சஜித் பிரேமதாசவை இந்தியா ஆதரிக்கும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் இந்திய தூதரகம், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தமிழர்களை வாக்களிக்க வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறதாம். இதற்காகவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு பிரிவான ‘ரா’வின் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஜரூராக களமிறங்கி செயல்பட்டும் வருகின்றனராம்.

இலங்கையில் ஈழத் தமிழர் தரப்பு சஜித் பிரேமதாசவையும் சிங்களர் தரப்பு அனுரா குமார திசநாயக்கவையும் ஆதரித்து வாக்களிக்கும் போக்கு நிலவுவதாகவும் இலங்கை பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல சீனாவும் தமக்கு ஆதரவான அனுர குமார திசநாயக்கவை வெல்ல வைக்க படுதீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு: உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு

வடகொரியாவில் அதிபர் கிம் மேற்பார்வையில் 2 ஏவுகணை சோதனை

பிடி இறுகுகிறது