வாசிப்பை வளமாக்குகிறதா அலைபேசி?

ஒரு நூலை வாசிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி மாணவர்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு புத்தகம் புதிய உலகத்திற்கான வாசல் கதவுகளை திறந்து வைக்கிறது என்பதும் நாம் அறிந்ததே.‌ எல்லாம் தெரிந்தும் ஏன் அந்த வாசிப்பின் வாசல் கதவை நாம் பூட்டி வைத்து இருக்கிறோம்? என்பது நமக்கே பதில் தெரியாத கேள்வி. தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் நமக்கே தெரியாமல் நம்மை மழுங்கடிக்கும் சில தேவையில்லாத விஷயங்கள் நம்மை கட்டிப்போட்டுவிடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திலும் புத்தகங்களை வாசிப்பது குறைந்திருக்கிறது. புத்தகக்கடையில் வார, மாத இதழ்களின் விற்பனை குறைந்து இருக்கிறது. பதிப்பகங்கள் சூழலை எதிர்கொள்ள முடியாமல் போராடுகின்றன. வாசிக்கும் பழக்கம் குறைந்து போய்விட்டதற்கான குறியீடுகள் இவை.

இன்று எல்லாம் அலைபேசியிலேயே கிடைக்கிறது. பிறகு ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்? என்பது இளைஞர்கள் எழுப்பும் கேள்வி. வாசிப்பைத் தாண்டி சிக்கல் எழுவது இங்குதான். ஒரு தலைப்பில் புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்பி அந்தப் புத்தகத்தைப் புத்தகக் கடையிலிருந்து நேரடியாக வாங்கிப் படிப்பதற்கும் அலைபேசியில் படிப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. நீங்கள் கடைகளில் புத்தகங்கள் வாங்கும்போது தேவைப்பட்ட புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கிவிடலாம். ஆனால், அதே செய்தியை ஆன்லைனில் தேடும் போது நீங்கள் விரும்பாத பல செய்திகள் உங்கள் முன்னே வந்து நிற்கின்றன.‌

நீங்கள் தேட வந்த புத்தகத்தை விட்டு விட்டு தேடாத தேவையில்லாத புத்தகங்களை படிக்கத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது.‌ உங்களை அது ஏழு மலைகளைத் தாண்டி, ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. இறுதியில் நீங்கள் தேடிய இலக்கை விட்டுவிட்டு தேடாத திசையில் போய் நிற்கிறீர்கள். அப்படி அலைபேசி நம்மை இழுத்துச் செல்லும் திசை நம்முடைய வளர்ச்சிக்கு உதவும் திசையாக இருந்தால் பரவாயில்லை. அது திசையாக இல்லாமல் இம்சையாக இருப்பதுதான் வேதனை.‌ கவர்ச்சியான விளம்பரங்களும், கவர்ச்சியான செய்திகளும் வந்து விழுகின்றன. இது முழுக்க முழுக்க கவனச்சிதறல்களை ஏற்படுத்தி நம்முடைய இலக்கு நோக்கிய பயணத்தில் பெரிய முட்டுக்கட்டையை போடுகிறது என்பதை இணையத்தில் தயார் செய்யும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பேருந்துப் பயணத்தின்போது ஒரு புத்தகத்தை புரட்டி நீங்கள் படித்து விட முடியும். ஆனால், பேருந்துப் பயணத்தில் நமது அலைபேசியைத் திறந்து படிப்பதற்கு பயமாக இருக்கிறது. நாம் ஒன்று தேட, அதில் ஒன்று வந்து நிற்கிறது.‌ சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தலைப்பில் பேசுவதற்காக அல்லது கட்டுரைப் போட்டிக்காக தகவலைத் தேடி அலைபேசியை திறந்தால் அலைபேசியில் இருந்து நாம் சுதந்திரம் பெற முடியாத அளவிற்கு அதில் வரும் செய்திகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன. இப்படி மனப்பிரச்னை மட்டுமில்லாமல் உடல் பிரச்னையும் ஏற்படுகிறது. அலைபேசியில் படிக்கும்போது நம் கண்கள் பாதிக்கப்படுகின்றன. புத்தகத்தைத் திறக்கும்போது உருவாகக்கூடிய புதுமனம் அலைபேசியைத் திறக்கும்போது கிடைப்பதில்லை. எனவே, மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பிற்கு மாற வேண்டும். இதழ்கள் வாசிப்பதன் இனிமையை உணர வேண்டும்.

புத்தகங்கள் வாசிப்பதன் பயன்கள்:

யார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் உலகின் நவீன வளர்ச்சியை உணர்ந்துகொள்ள முடியும்.‌ கலை இலக்கிய வளர்ச்சியைக் கற்றுக்கொள்ள முடியும். நம்மைச் சுற்றியுள்ள சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஒரு புதிய விடுதலை நமக்கு கிடைக்கும். புத்தகங்கள் படிப்பதன் மூலம் நமக்கு புதிய இறக்கைகள் முளைக்கின்றன. நாம் பறப்பதற்குப் புதிய வானமும் கிடைக்கிறது. புத்தகங்கள்தான் ஒரு மாணவனை விமானியாகவும், விஞ்ஞானியாகவும், எழுத்தாளனாகவும், அரசியல்வாதியாகவும், இசைஞானியாகவும் மாற்றுகிறது.‌ எழுத்தாற்றல் வளர்கிறது, படைப்பாற்றல் பெருகுகிறது. உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தக வாசிப்பு பயிற்சிதான் வலிமை சேர்க்கிறது.‌ மன அழுத்தம் குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும், கோபம் குறைவதும் புத்தக வாசிப்பின் கூடுதல் பலன்கள்.

புத்தக வாசிப்பில் இருக்கும் தடைகள்:

எல்லாம் சரி புத்தகம் வாசிப்பதற்கான வசதி எல்லோருக்கும் இருக்கிறதா? என்றால் ஆம் என்று சொல்லிவிட முடியாது. இன்னும் செய்தித்தாள் பார்க்காத கிராமங்கள் இருக்கின்றன.‌ அதுபோன்ற கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாணவர்கள் வாசிப்பதற்காக நான்கைந்து செய்தித்தாள்களை வாங்கிப் போடலாம். நூலகத்திற்கு என்று தனிக்கட்டிட வசதி இல்லை என்றாலும்கூட ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் முக்கியமான புத்தகங்களை வாங்கி வைக்கலாம். முக்கியமாகத் தன்னம்பிக்கை தரும் நூல்கள், மேற்படிப்பு சம்பந்தமான நூல்கள், வேலை வாய்ப்பு, சுயதொழில் சம்பந்தமான நூல்கள் ஆகியவற்றை வாங்கி வைக்கலாம்.‌

வாசிப்பது என்றால் ஆண்கள்தான் செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும், பெண்கள் நாவல்கள்தான் படிக்க வேண்டும் என்பது போலவும், செய்தித்தாள்களைப் படித்து ஆண்கள் அரசியல் பேச வேண்டும் பெண்கள் குறுக்கெழுத்துப் போட்டிக்கு மட்டுமே விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு பொதுச் சிந்தனை நம்மிடையே பரவி யிருக்கிறது. இது மாற வேண்டும் பெண்கள் அரசியல் செய்திகள் படிப்பதுடன் அரசியல் குறித்த சக விவாதங்களில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் செயல்படும் நற்பணி இயக்கங்கள், இளைஞர் மன்ற மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கப் போட்டிகளை நடத்தி பரிசளிக்கலாம். பெற்றோர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி மற்றப் புத்தகங்களை வாசிக்கத் தங்கள் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் நூலகங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பதன் மூலம் தன்னம்பிக்கை பிறக்கும்… அந்த வானம் கூட வசப்படும்…
வாருங்கள் வாசிப்போம்… புத்தகத்தின் வாசனையைச் சுவாசிப்போம்!
– இன்னும் படிப்போம்…

Related posts

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது