மருத்துவர் பலாத்கார கொலை குறித்து விமர்சனம்; கபில் சிபலுக்கு 72 மணி நேரம் கெடு: சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்க மாஜி தலைவர் கடிதம்

புதுடெல்லி: மருத்துவர் பலாத்கார கொலை குறித்து விமர்சனம் செய்த கபில் சிபலுக்கு 72 மணி நேரம் கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்க மாஜி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்குவங்க அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, இதுபோன்ற வழக்குகளில் ஆஜரானதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி நிலவியது. இதற்கிடையே கபில் சிபல் வெளியிட்ட அறிக்கையில், ‘கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த பலாத்கார சம்பவம் பெரிய நோய்’ என்று கூறியுள்ளார்.

இவரது கருத்தை பலரும் கண்டித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆதிஷ் அகர்வால், கபில் சிபலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை சம்பவம் குறித்து விமர்சித்த கபில் சிபல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். கபில் சிபலின் கருத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரிக்கவில்லை. அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார்.

மேலும் அவரது கருத்து குறும்புத்தனமானது; ஆபத்தானது. பலாத்காரம் மற்றும் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், லட்சக்கணக்கான மருத்துவர்கள், மாணவர்களுக்கும் பெரும் அநீதி இழைக்கிறது. பாதுகாப்பான பணிச்சூழல் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கபில் சிபலின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல; அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று, அடுத்த 72 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா