‘‘குழந்தைகள்தான் இல்லையே, சொத்துக்கள் எதற்கு?’’ அரசு டாக்டர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்து பணியாளர் ஓட்டம்: போனில் விசாரித்தபோது கொலை மிரட்டல்

வேளச்சேரி: அடையாறு இந்திரா நகரில் ஓய்வுப்பெற்ற அரசு டாக்டர் வீட்டில் 100 பவுன் நகைகள், பணம் கொள்ளையடித்து தப்பிய வீட்டு பணியாளரிடம் விசாரித்தபோது, ‘’ உங்களுக்குத்தான் குழந்தை இல்லையே, சொத்துக்கள் எதற்கு’ என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். சென்னை அடையாறு இந்திரா நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (76). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி ஞானமணி(72).
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில், டாக்டர் கனகராஜ் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்ைச பெற்று வந்துள்ளதாக தெரிகிறது. ஞானமணிக்கு வயதாகிவிட்டதால்அவரை உடனிருந்து கவனிப்பதற்காக கடலூர் பகுதியை சேர்ந்த கனகசண்முகம் என்ற உறவினரை மாதம் ₹30 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இவர் இரண்டுபேரிடமும் மிகவும் பாசத்துடன் நடந்துகொண்டார்.

இந்தநிலையில் டாக்டர் கனகராஜ் கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டார். இதனால் கனகசண்முகமும் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், ஞானமணி கடந்த ஜூலை 13ம் தேதி வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் செயின், மோதிரம், வளையல் உள்பட 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹3 லட்சம் மாயமானது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கனகசண்முகத்தை ஞானமணி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், ‘’நகைகள், பணத்தை தான்தான் எடுத்தேன்.

உங்களுக்கு தான் குழந்தைகள் இல்லையே, எனவே நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நகை என்னிடம் இருக்கட்டும்’’ என்று தெரிவித்ததுடன் இதுபற்றி யாரிடமாவது கூறினாலோ போலீசில் புகார் கொடுத்தாலோ உங்களை கொலைசெய்துவிடுவேன்’’ என்று மிரட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஞானமணி அடையாறு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக தலைமறைவாக உள்ள கனகசண்முகத்தை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்